கொல்கத்தாவுடன் நாளை மோதல்... கொல்கத்தாவிலும் சிஎஸ்கே ஆதிக்கம் தொடருமா?
Recommended Video

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 கிரி்ககெட் போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் டாப்பில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பாதி கிணறு தாண்டியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக ஒவ்வொரு அணியும் போராடி வருகின்றன.
இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 6ல் வென்று 12 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பஞ்சாப், கொல்கத்தா அணிகள் அதற்கடுத்த நிலையில் உள்ளன.
கொல்கத்தாவில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் சீசனின் 33வது ஆட்டத்தில் சிஎஸ்கேவும், கொல்கத்தா அணியும் மோத உள்ளன. இரண்டு அணிகளும் இரண்டாவது முறையாக மோதுகின்றன.

சென்னையில் அபார வெற்றி
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஒரே ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் மோதியது. அதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபாரமாக வென்றது.

அசத்தும் சிஎஸ்கே பேட்டிங்
இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிகவும் வலுவாக உள்ளது. ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு தொடர்ந்து கலக்கி வரும் நிலையில், சின்ன தல சுரேஷ் ரெய்னா பார்முக்கு திரும்பியுள்ளார். இதையெல்லாம்விட, கேப்டன் கூல் தோனி இந்த சீசனில் இதுவரை காட்டிய அதிரடி ஆட்டம், சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய பலமாகும்.

கலக்கும் தமிழன்
கொல்கத்தா அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் உள்ளார். இந்த சீசனில் அவருடைய கேப்டன்சி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் கொல்கத்தா 4ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியை வென்றது.

மீண்டும் திரில் ஆட்டம்
மற்றொரு வெற்றியின் மூலம் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள சிஎஸ்கே கண்டிப்பாக போராடும். அதே நேரத்தில் மற்றொரு வெற்றி கிடைத்தால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் கொல்கத்தாவும் விடாப்படியாக விளையாடும். அதனால், நாளை நடக்கும் ஆட்டம் மற்றொரு திரில் ஆட்டமாக அமையும்.


Click it and Unblock the Notifications