சிஎஸ்கே வைத்த ட்விஸ்ட்.. புது கோச் என்ன வேணா பண்ணலாம் ஆனா இந்த ஒரு கண்டிஷனுக்கு ஓகே சொல்லணும்
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள சிஎஸ்கே நிர்வாகம் ஒரு திடீர் 'ட்விஸ்ட்' வைத்துள்ளது. புதிய பயிற்சியாளர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால், "ஒரு விஷயத்தில் மட்டும் கை வைக்கக் கூடாது" என்ற நிபந்தனையை விதித்துள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் நீக்கப்பட்ட பிறகு, புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் சிஎஸ்கே தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது குறித்துப் பேசிய சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், புதிய தலைமை பயிற்சியாளர் தனக்குத் தேவையான உதவி பயிற்சியாளர்கள் குழுவை அவரே தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்.

இதன் காரணமாக, நீண்ட காலமாக சிஎஸ்கே அணியுடன் பயணித்து வரும் மைக் ஹஸ்ஸி, எரிக் சிமன்ஸ் மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் போன்ற முக்கிய பயிற்சியாளர்கள் அணியிலிருந்து மாற்றப்பட வாய்ப்புள்ளது. புதிய பயிற்சியாளரின் யோசனைக்கு ஏற்ப உதவியாளர்கள் குழுவை மாற்ற சிஎஸ்கே நிர்வாகம் தயாராக உள்ளது.
ஆனால், இதற்கெல்லாம் அனுமதி அளித்துள்ள சிஎஸ்கே நிர்வாகம் ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. புதிய பயிற்சியாளர் உதவி பயிற்சியாளர்கள் குழுவை மாற்றிக் கொள்ளலாமே தவிர, அணியின் முக்கிய வீரர்களை மாற்றக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. அணியின் முக்கிய வீரர்களை அப்படியே தக்கவைத்துக் கொண்டு, அவர்களைச் சுற்றியே புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி பார்த்தால் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மூத்த வீரர் சஞ்சு சாம்சன், சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ் உள்ளிட்டோரை அணியில் இருந்து நீக்கக் கூடாது என்பதை தான் சிஎஸ்கே நிர்வாகம் மறைமுகமாக கூறி உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஹேமங் பதானி, சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அடுத்த பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில் தோனி முக்கியப் பங்காற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
