சிஎஸ்கே பிளேயிங் 11-ஐ சொல்ல 3 கோடி.. ஒரு போட்டிக்கு 60 லட்சம்.. ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில் வெளியான தகவல்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயரை மையப்படுத்தி புதிய மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு வெடித்துள்ளது. பிரபல புலனாய்வு ஊடகமான தெஹல்கா நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் விவரங்களை சூதாட்ட புக்கிகளுக்கு முன்கூட்டியே கசியவிட்டு 3 கோடி ரூபாய் பணம் பெற்றதாக முன்னாள் ரஞ்சி வீரர் ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
5 போட்டிகளுக்கு 3 கோடி ரூபாய்!
நாகாலாந்து அணிக்காக 6 முதல்தரப் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடிய ரஞ்சி வீரரான ரசித் பாட்டியா என்பவரிடம் இந்த ரகசிய வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சூதாட்ட புக்கி போல சென்ற செய்தியாளரிடம் பேசிய ரசித் பாட்டியா, 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் விவரங்களை டாஸ் போடுவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே ஸ்னாப்சாட் செயலி வழியாக லண்டனில் உள்ள புக்கிகளுக்குக் கசியவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாக போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரங்கள் டாஸ் போடப்படும் போது போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
ஆனால், சிஎஸ்கே அணியில் உள்ள தனக்குத் தெரிந்த வீரர் மூலமாக இந்தத் தகவல்களை முன்கூட்டியே பெற்று புக்கிகளுக்கு விற்றதாக பாட்டியா தெரிவித்துள்ளார். ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 5 போட்டிகளுக்கு 3 கோடி ரூபாய் பெற்றதாகவும், இந்தத் தகவல்களை வைத்துத் தானும் நேரடியாகப் பந்தயம் கட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

1 கோடிக்கு 90 சதவீத கேரண்டி
தொடர்ந்து பேசிய அவர், நடப்பு 2026 ஐபிஎல் சீசனிலும் இதே போன்ற தகவல்களைத் தருவதாக பேரம் பேசியுள்ளார். பிளேயிங் லெவன் விவரங்களைத் தர ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாயும், களத்தில் ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு ஒரு போட்டிக்கு 1 கோடி ரூபாயும் கேட்டதாக அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது. ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு 90 சதவீத கேரண்டி தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஆனால், 2026 ஐபிஎல் ஏலத்தில் அந்த குறிப்பிட்ட சிஎஸ்கே வீரர் காயம் காரணமாக எந்த அணியாலும் எடுக்கப்படாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக பாட்டியா கூறியுள்ளார்.
டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் கைவரிசை
ஐபிஎல் வாய்ப்பு நழுவியதும், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். சிஎஸ்கே-வில் பிளேயிங் லெவனை முன் கூட்டியே சொன்ன அந்த வீரர் டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடுவதால், அங்கு மேட்ச் பிக்சிங் செய்வது மிகவும் எளிது என்று பாட்டியா கூறியுள்ளார். பேட்டர்களை வேண்டுமென்றே மெதுவாக ஆட வைப்பது, வேண்டுமென்றே ரன் அவுட் ஆவது போன்ற வழிகளில் ஆட்டத்தை மாற்றிக் காட்டுவதாக அவர் புக்கியிடம் பேரம் பேசியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்த புலனாய்வுக் குழுவினர் ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்ற டெல்லி லீக் போட்டியின் பிளேயிங் லெவனை பாட்டியாவிடம் முன்கூட்டியே கேட்டுள்ளனர். அவர் போட்டிக்கு முன் சொன்ன அதே வீரர்கள் பட்டியலே அதிகாரப்பூர்வ டாஸுக்கு பிறகும் வெளியானது ஆய்வில் உறுதியாகியுள்ளது.
அந்த 23 வயது சிஎஸ்கே வீரர் யார்?
இந்த ரகசியத் தகவல்களை சிஎஸ்கே அணியில் இருந்து கசியவிட்ட வீரரின் பெயரை பாட்டியா வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும், அவர் டெல்லியைச் சேர்ந்த 23 வயது ரஞ்சி வீரர் என்றும், அவர் 18 வயதாக இருக்கும் போதிலிருந்தே தனக்குப் பழக்கம் என்றும் பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.
ஐசிசி ஊழல் தடுப்பு விதிமீறல்
அணியின் உள்விவகாரங்களை சூதாட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விதி 2.3.1 மற்றும் 2.3.2-ன் கீழ் மிகக் கடுமையான குற்றமாகும். இந்த குற்றச்சாட்டு குறித்து சிஎஸ்கே நிர்வாகமோ அல்லது பிசிசிஐயோ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.
முன்னதாக 2013-ல் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்டப் புகாரைத் தொடர்ந்து லோதா கமிட்டி பரிந்துரையின்படி சிஎஸ்கே அணி 2015-ல் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியின் பெயரை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உலுக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

