“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தோனி ஆடுவாரா என்று என்னால் சொல்ல முடியாது”.. ஹசி சொன்ன தகவல்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான நாயகன் தோனி எப்போது களமிறங்குவார் என்ற மிகப்பெரிய கேள்விக்கான விடை தற்போது கிடைத்துள்ளது. காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில் கூட அவர் விளையாடாதது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் எப்போது மைதானத்தில் அதிரடி ஆட்டம் ஆடுவார் என ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருக்கும் நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கேல் ஹசி ஒரு மிக முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அது என்ன என்பதை இங்கே விரிவாக பார்ப்போம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 2 அன்று நடைபெறும் மிக முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான வலைப்பயிற்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த ஹசியிடம் தோனியின் வருகை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. கடந்த 3 வாரங்களாக காயத்தால் அவதிப்பட்டு வரும் தோனி, அதிலிருந்து மீண்டு உடற்தகுதி தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளார். ஹைதராபாத் மற்றும் மும்பை சென்ற அணியினருடனும் அவர் இணைந்து பயணித்துள்ளார். அவர் காயத்தில் இருந்து மிக வேகமாக குணமடைந்து வருவது அணிக்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளதாக ஹசி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தோனி நாளை நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா அல்லது அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் அவர் மிக விரைவில் அணிக்கு திரும்புவார் என ஹசி நம்பிக்கை தெரிவித்தார். தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமை குறித்து எங்களுக்கு துளியும் கவலையில்லை. ஆனால், போட்டியின் கடைசி கட்டங்களில் வேகமாக ஓடி ரன் எடுப்பது மிகவும் முக்கியம். அதற்கான ஓடும் வேகத்தை சீராக பராமரிப்பது தான் தற்போதுள்ள முக்கிய சவால். அதற்கான பயிற்சியில் தான் அவர் தீவிரமாக ஈடுபட்டு தனது ஓட்ட வேகத்தை மேம்படுத்தி வருகிறார் என அவர் விளக்கினார்.
தனது காயம் முழுமையாக குணமடைந்துவிட்டதாக தோனி எப்போது முழுமையாக உணர்கிறாரோ, அப்போது அவர் நிச்சயமாக விளையாட தயாராக இருப்பதாக எங்களுக்கு சிக்னல் கொடுப்பார். போட்டியில் களமிறங்கும் இறுதி முடிவை அவரே எடுப்பார். அந்த ஒரு சிக்னலுக்காக தான் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களைப் போல நாங்களும் காத்துக்கொண்டிருக்கிறோம் என ஹசி தெரிவித்தார்.
இதற்கிடையே, சிஎஸ்கே அணியின் வலைப்பயிற்சிகளில் முழுமையாக ஈடுபடும் தோனி, போட்டி நடக்கும் நாட்களில் மட்டும் மைதானத்திற்கு வருவதை முற்றிலும் தவிர்த்து வருகிறார். தான் மைதானத்தில் இருந்தால் அது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து, அணியின் மீதான கவனத்தை திசைதிருப்பும் என்பதால் தான் அவர் இவ்வாறு பெருந்தன்மையுடன் செயல்படுகிறார் என்ற தகவலையும் ஹசி பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications
