IPL 2026: “சச்சின் கூட ஒவ்வொரு மேட்சுக்கும் வந்தார்.. தோனி வராததை ஏற்க முடியாது”.. ஸ்டெய்ன் காட்டம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ள நிலையில், முன்னாள் கேப்டன் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. 5 முறை கோப்பை வென்ற சிஎஸ்கே அணி, தொடர்ந்து 3-வது ஆண்டாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் தவிப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. காயங்கள் காரணமாக இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெயின் காட்டமான விமர்சனம்
ஏபி டி வில்லியர்ஸின் யூடியூப் சேனலில் பங்கேற்ற டேல் ஸ்டெயின் கூறுகையில், "தோனி, நீங்கள் இப்போது உங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஒரு அற்புதமான வீரராகத் திகழ்ந்துள்ளீர்கள். ஆனால் இப்போது மற்ற இளம் வீரர்களின் மீதுதான் கவனம் திரும்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும், சச்சின் டெண்டுல்கருடன் தோனியை ஒப்பிட்ட அவர், "சச்சின் இப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு போட்டிக்கும் மைதானத்திற்கு வந்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார். ஆனால் தோனி மைதானத்திற்கு (டக்-அவுட்) வராததை என்னால் ஏற்க முடியாது. அவர் ஆடுகளத்தில் இருப்பது சிஎஸ்கே அணியின் டிரெஸ்ஸிங் ரூம் சூழலை மேம்படுத்த உதவும்" என்றார்.
ஏபி டி வில்லியர்ஸ் ஏமாற்றம்
ஏபி டி வில்லியர்ஸும் தனது ஏமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டார். தோனி குறைந்தபட்சம் விக்கெட் கீப்பராகவாவது களமிறங்குவார் என ஒட்டுமொத்த ரசிகர்களும் காத்திருந்ததாகவும், இறுதியில் அவர் விளையாடாமலேயே தொடர் முடிவுக்கு வந்தது ரசிகர்களின் இதயத்தை உடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
19-வது சீசனில் சிஎஸ்கே அணியின் இந்த மோசமான தோல்வி மற்றும் தோனி விளையாடாதது, அவரது எதிர்காலம் குறித்த விவாதத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. தோனி ஒரு வீரராக விளையாடாவிட்டாலும், அடுத்த சீசனில் ஒரு பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ சிஎஸ்கே அணியுடன் இருக்க வேண்டும் என்ற வாதமும் வலுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications
