சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விஜய் சங்கர் இடம் பெறலாமா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிக மோசமான விமர்சனத்தை செய்து இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது.
இந்த முறை தமிழகத்தை சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருக்கும். ஆனால், இந்த முறை இரண்டு தமிழ்நாட்டு வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் சிஎஸ்கே அணி வாய்ப்பளித்தது. அதில் ஒருவர் அஸ்வின், மற்றொருவர் விஜய் சங்கர்.

ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை மிக மோசமாகவே செயல்பட்டு வந்துள்ளனர். எப்போதும் தமிழ்நாட்டு வீரர்களை ஆதரித்து பேசும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இந்த முறை அஸ்வின் மற்றும் விஜய் சங்கரை மிக மோசமாக விமர்சனம் செய்து வருகிறார்.
சமீபத்தில், "ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும், அப்போதுதான் அவருக்கு தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது புரியவரும். இரண்டு போட்டிகளுக்கு வெளியே உட்கார வைத்தால் தான் அவர் ஒழுங்காக விளையாடுவார்" என்று விமர்சனம் செய்து இருந்தார் ஸ்ரீகாந்த்.
அவர் சொன்னதைப் போலவே அஸ்வின் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், விஜய் சங்கர் தொடர்ந்து விளையாடி வருகிறார். விஜய் ஷங்கர் இரண்டு அரை சதங்களை அடித்து இருந்தாலும் அந்த இரண்டுமே மோசமான சூழ்நிலையில் அணியின் தோல்வியில் அடிக்கப்பட்டன. அது விமர்சனத்தையும் சந்தித்து இருந்தது.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதில் அளித்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் "நமக்கு (சிஎஸ்கே-வுக்கு) விஜய் சங்கர் தேவையா?" என்று கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த் "ஆம், மற்ற வீரர்களுக்கு பானங்களை எடுத்துச் செல்வதற்கு அவர் தேவை" என்று நையாண்டியாக பதில் அளித்து இருக்கிறார். இது விமர்சனத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல மற்றொரு முக்கிய பதிலையும் அளித்தார் ஸ்ரீகாந்த். ஒரு ரசிகர் ராகுல் திரிபாதியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான வன்ஷ் பேடியை சேர்க்கலாமா? என்று கேட்டு இருந்தார். அதற்கு "வெளியே அமர்ந்திருக்கும் மற்ற இளம் வீரர்களையும் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார் ஸ்ரீகாந்த்.