“தோனியே ஹர்திக் உடன் பேசி சிஎஸ்கேவுக்கு கொண்டு வருவார் என்கிறார்கள் ஆனால்..”.. அஸ்வின் பேச்சு
சென்னை: 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் வேளையில், மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு செல்ல உள்ளதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் நிலையில் எந்த அணி அவரை வாங்கப் போகிறது என அஸ்வின் முக்கிய தகவலை கூறி இருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா ஐபிஎல் அணி மாற்ற விவகாரத்தில் தோனி தலையிட்டு அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இழுக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் தீயாய் பரவின. ஆனால், இந்தத் தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்திக்கை தட்டித்தூக்கப் போகும் உண்மையான அணி எது என்பதைத் தனது யூடியூப் சேனலில் போட்டு உடைத்துள்ளார்.

சிஎஸ்கே குறித்த வதந்திகளுக்குப் பதிலளித்த அஸ்வின், "தோனி நேரடியாகப் பேசி ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கேவுக்கு கொண்டு வரப்போகிறார் எனப் பேசப்படுகிறது. அப்படி வந்தால் அணிக்கு மிகப்பெரிய பலம்தான். ஆனால் என் கணிப்புப்படி இது நடப்பதற்கு துளியும் வாய்ப்பில்லை. இது நடக்காத காரியம்" என்றார். சமீபத்தில் ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக ஜாகீர் கான் சிஎஸ்கேவின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளார். மும்பை அணியில் ஒன்றாக இருந்த காலகட்டத்தில் ஜாகீர் கானுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே சுமூகமான உறவு இருக்கவில்லை. இந்தக் கசப்பான அனுபவமே அவர் சிஎஸ்கேவுக்கு வராமல் போக முக்கியக் காரணமாக அமையும் எனத் தெரிகிறது.
ஹர்திக்கை வாங்கும் பந்தயத்தில் முன்னிலையில் உள்ள அணி எது என்பதை வெளிப்படையாகக் கூறிய அஸ்வின், "எனக்குக் கிடைத்த நம்பகமான தகவலின்படி, ஹர்திக் பாண்டியாவை டிரேட் முறையில் தங்கள் அணிக்குள் இழுக்கும் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே தற்போது முதலிடத்தில் நீடிக்கிறது" என்று அதிரடியாகத் தெரிவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சனை விடுவித்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அனுபவமிக்க வேகப்பந்து ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை தங்களது அணியில் சேர்க்க முயன்று வருகிறது.
மறுபுறம் தலைமைப் பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே விலகியதால் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் புதிய சூழல் உருவாகியுள்ளது. புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய மைக் ஹஸ்ஸி, இயான் மோர்கன், ஆரோன் பின்ச், மார்க் பவுச்சர் மற்றும் அட்ரியன் பிர்ரெல் ஆகிய 5 பேர் கொண்ட பட்டியலை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தயார் செய்துள்ளது. புதிய தலைமைப் பயிற்சியாளர் முறைப்படி நியமிக்கப்பட்ட பிறகே, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் மற்றும் அவரது டிரேட் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


