5 சிக்ஸ், 5 ஃபோர்.. சிஎஸ்கே பவுலர் கம்போஜ் மரண அடி.. டெஸ்ட் மேட்ச்சில் 9ஆம் வரிசையில் இறங்கி அரைசதம்
பெங்களூரு: 2026 துலீப் டிராபி டெஸ்ட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் 9 வது வீரராகக் களம் இறங்கி 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் அதிரடி அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் மேற்கு மற்றும் வடக்கு மண்டல அணிகள் மோதும் துலீப் டிராபி போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாளில், வடக்கு மண்டல அணி தனது முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது களமிறங்கிய ஹரியானாவைச் சேர்ந்த அன்ஷுல் கம்போஜ், வெறும் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 60 ரன்கள் குவித்து வடக்கு மண்டல அணி 251 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.

கடந்த 2025 ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தார் கம்போஜ். அவருக்கு தொடர்ந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் துலீப் டிராபியில் பேட்டிங்கிலும் அசத்தி 49 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். மேலும், 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இவர் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் 115.38 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய அவர், வடக்கு மண்டல அணியின் கடைசி விக்கெட்டாகவே வீழ்ந்தார். வடக்கு மண்டல அணியில் இடம் பெற்று இருந்த டெல்லி ரஞ்சி கேப்டன் ஆயுஷ் பதோனி 4 வது வீரராக களம் இறங்கி 51 ரன்களும், ஆயுஷ் தோசெஜா 42 ரன்களும் எடுத்தனர். இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். பதோனி ஆட்டமிழந்த பிறகு வடக்கு மண்டல அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் சரிந்தனர். கம்போஜ் இறுதி கட்டத்தில் தனியாளாகப் போராடி அணியைக் காப்பாற்றினார்.
மேற்கு மண்டல அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய துஷார் தேஷ்பாண்டே மற்றும் தனுஷ் கோட்டியான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். முகேஷ் சவுத்ரி மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மேற்கு மண்டல அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 22 ரன்கள் எடுத்திருந்த போது அபித் முஷ்டாக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஹர்விக் தேசாய் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். கம்போஜின் அதிரடி ஆட்டம் மற்றும் வடக்கு மண்டல அணியின் பந்துவீச்சால் மேற்கு மண்டல அணிக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
