சிஎஸ்கே-வில் மேலும் பலரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. ருதுராஜ் கெய்க்வாட் வந்த உடன் அதிரடி முடிவு
சென்னை: 2027 ஐபிஎல் தொடருக்கு முன் வீரர்கள் தக்கவைப்பு, பயிற்சியாளர் குழுவில் அடுத்தகட்ட மாற்றங்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் பல முக்கிய நிகழ்வுகள் வரும் நாட்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் வெளியேற்றப்பட்ட நிலையில், உதவி பயிற்சியாளர்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சிஎஸ்கே முகாமில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்தவுடன் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
வரும் ஆகஸ்ட் 23 முதல் தொடங்கவுள்ள துலீப் டிராபி தொடரில் மேற்கு மண்டல அணியை ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்த உள்ளார். இந்தத் தொடர் முடிந்த உடனேயே அவர் சிஎஸ்கே அணியின் உடற்தகுதி முகாமில் இணைய உள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் வெறும் 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட சிஎஸ்கே அணி, இந்த முறை பெரும் மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக வீரர்களுக்கு 2 முதல் 3 நாட்கள் கொண்ட உடற்தகுதி முகாம்களை நடத்தி, அவர்களின் உடற்தகுதியை ஆராய்ந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த மூன்று சீசன்களாக சொதப்பியதால் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அணியின் மற்ற உதவிப் பணியாளர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிலும் பெரிய அளவில் களையெடுக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முகாமிற்கு வந்தவுடன், யார் யாரை அணியில் இருந்து விடுவிப்பது, யாரைத் தக்கவைப்பது மற்றும் பயிற்சியாளர் குழுவில் மேலும் யாரையெல்லாம் வீட்டுக்கு அனுப்புவது என்பது குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே அணிக்கு மாற்றப் பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல்களை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இது குறித்து மும்பை அணியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "எங்கள் அணியின் ஆய்வுப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. வீரர்களைப் பரிமாற்றம் செய்வது குறித்து நாங்கள் எந்த ஐபிஎல் அணியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த ஆய்வு முடிந்த பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும்" என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
