நாங்கள் யானை அல்ல... குதிரைபோல் மும்மடங்கு வேகத்தில் வருவோம்.... சாதிக்க சிஎஸ்கே தயார்!
புனே: தோல்வி என்னும் அடி சறுக்கியது ஆனால் நாம் யானை போல் எழுவதற்கு நேரம் பிடிக்க போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம். தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும்.
இது புது தமிழ் கவிஞரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வார்த்தைகள்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாப்பில் உள்ளது. இதுவரை விளையாடிய 7 ஆட்டங்களில் 5ல் வென்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோல்வியடைந்தது. அதன்பிறகு டுவிட்டரில் ஹர்பஜன் பதிவிட்ட இந்த வார்த்தைகள்தான், அணியின் மந்திரமாக மாறியுள்ளது.

முதல் முறையாக மோதல்
புனேயில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதுகிறது. இரு அணிகளும் இந்த சீசனில் முதல் முறையாக விளையாட உள்ளன.

தெம்புடன் உள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 ஆட்டங்களில் 2 ஆட்டங்களில் வெற்றி, 5ல் தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி கொல்கத்தாவை வென்ற தெம்பில் உள்ளது.

கம்பீர் சந்தேகமே
தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி கேப்டன் பதவியில் இருந்து கவுதம் கம்பீர் விலகினார். கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்கவில்லை. நாளை நடக்கும் போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சிஎஸ்கேவுக்கு வாய்ப்பு
டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் ஆகியோர் பார்முக்கு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் சிஎஸ்கேவில் டாப் ஆர்டரில் உள்ள அனைவரும் முழு பார்மில் உள்ளனர். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஓவர்களில் அட்டாக்கிங் பந்துவீச்சு இல்லாதது சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமானது. இதையெல்லாம் கேப்டன் கூல் சமாளித்து விடுவார் என்பதே புதிய தமிழ் புலவரின் கருத்து. ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுதான்.


Click it and Unblock the Notifications