புனேயிலும் வீசியது சிஎஸ்கே புயல்.. ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிராக அபார வெற்றி
Recommended Video

புனே: புனேயில் நடந்த ஐபிஎல் டி-20 கிரிக்கெட் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் புதிய சொந்த மண்ணில் சிஎஸ்கே முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 16 ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஐதராபாத், பஞ்சாப் அணிகள் அதற்கடுத்த இடங்களில் உள்ள்ளன.
சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்திலும், ராஜஸ்தான் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திலும் உள்ளன.
இரண்டாண்டுகள் தடையால் விளையாடாமல் இருந்த சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்கள் அணிகள் மீண்டும் களமிறங்கியுள்ளன. குறிப்பாக இரண்டு முறை சாம்பியனான சிஎஸ்கே, கேப்டன் கூல் டோணி தலைமையில் களமிறங்கியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசி ஓவர் வெற்றிகள்
சிஎஸ்கே இதுவரை விளையாடியுள்ள 3 ஆட்டங்களில், மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக கடைசி ஓவரில் திரில் வெற்றி வெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தல டோணி அதிரடியாக விளையாடியும் கடைசி ஓவரில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

கடைசி ஆட்டத்தில் தோல்வி
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி 2 ஆட்டங்களில் வெற்றி, 2ல் தோல்வியடைந்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி அடைந்தது. டெல்லி, பெங்களூரு அணிகளை வென்ற அந்த அணி, கொல்கத்தாவிடம் தோல்வியடைந்துள்ளது.

மைதானம் மாற்றம்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டங்களில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, புதிய சொந்த மைதானமான புனேயில், தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே விளையாடுகிறது. டாஸை வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது

சீசனின் 2வது சதம்
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அணியின் ஸ்கோர் 50ஆக இருந்தபோது அம்பட்டி ராயுடு 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சுரேஷ் ரெய்னா 46, டோணி 5, பில்லிங் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி சீசனின் 2-வது சதத்தை அடித்தார். அவர் 57 பந்துகளில் 9 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தானின் அணியின் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்களையும், லாப்லின் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இன்று யாருக்கு வெற்றி
205 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான், 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 45, ஜோஸ் பட்லர் 22 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சிஎஸ்கேவின் தீபக் சாகர், ஷர்துல் தாகுர், பிராவோ, கரன் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 64 ரன்களில் சிஎஸ்கே வென்றது.
இதன் மூலம் தனது புதிய சொந்த மைதானமான புனேயில் முதல் வெற்றியை பெற்றதுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தையும் சிஎஸ்கே பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications