மும்பை: சென்னை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு அவரது பள்ளித் தோழியான நபா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. இவர்களுக்கு சக வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அண்மையில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணியின் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு திருமணம் முடிவடைந்தது. தற்போது மற்றொரு சிஎஸ்கே வீரரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு அவரது பள்ளித் தோழியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியின் வீரர்கள் அனைவரும் பல்வேறு வகையில் வெற்றிக்கு உதவியாக அமைந்தனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே மிடில் ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 16 போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடியுள்ள துஷார் தேஷ்பாண்டே, 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இதன்பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் துஷார் தேஷ்பாண்டேவுக்கு அவரது பள்ளித் தோழியான நபா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துஷார் தேஷ்பாண்டே வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், பள்ளியில் படிக்கும் போது க்ரஷாக இருந்தவர், தற்போது எனக்கான மணப்பெண்ணாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக துஷார் தேஷ்பாண்டே பதிவிட்டுள்ளார்.
இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை அணி வீரர் சிவம் துபே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் மும்பை, சென்னை மற்றும் டெல்லி அணிகளைச் சேர்ந்த வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் நிச்சயதார்த்தத்தின் போது பந்தை வைத்து இருவரும் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.