
ஐபிஎல் போட்டிக்காக காத்திருப்பு
கடந்த ஆண்டு உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு பின்பு சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னை விலக்கிக் கொண்ட தோனி, இந்திய அணியிலிருந்தும் விலக்கப்பட்டார். இந்நிலையில் ஐபிஎல்லில் அவர் சிறப்பாக ஆடினால், அவர் அணியில் சேர்க்கப்படுவார் என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகள் கேள்விக்குறி
இந்நிலையில் கடந்த 29ம் தேதி துவங்கவிருந்த ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதால், ஐபிஎல் துவங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என தெரிகிறது.

ரசிகர்கள் ஏக்கம்
இந்நிலையில் ஐபிஎல்லில் தோனியின் ஆட்டத்தை கண்டு ரசிக்கலாம், அதன்மூலம் அவர் இந்திய அணியில் இடம்பெற்றால், அதையும் காணலாம் என ஆசையுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு கொரோனாவும், அது தடை செய்த ஐபிஎல்லும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேபோலவே தோனியும் எந்தவித செயல்பாடும் இன்றி வீட்டிலேயே முடங்கியுள்ளார். அவ்வப்போது வெளியிடப்படும் அவரது வீடியோக்களே ரசிகர்களின் ஒரே ஆறுதல்.

சக வீரர்கள் பாராட்டு
ஐபிஎல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள எம்எஸ் தோனி, ஐபிஎல் தொடருக்காக கடந்த 2ம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்களை விளையாடிய நிலையில், அவர் தனது பயிற்சி ஆட்டங்களையே நிஜ ஆட்டம் போல விளையாடியதாக லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா சிஎஸ்கே இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.

கரண் சர்மா கருத்து
இதேபோல மஹி பாய் சக வீரர்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கியதாக பந்துவீச்சாளர் கரண் சர்மா கூறியுள்ளார். தினமும் 3 முதல் 4 மணிநேரங்கள் அவர் நெட் பயிற்சியில் ஈடுபடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பயிற்சி ஆட்டங்களை பார்ப்பவர்கள் அவர் நீண்ட நாட்கள் விளையாடாமல் இருப்பதை நம்ப மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவர் சக வீரர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தோனி குறித்து பயிற்சியாளர் பாராட்டு
இந்நிலையில், தோனி இயற்கையாகவே சிறந்த விளையாட்டு வீரர் என்றும், விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருந்தாலும், தான் ஒருபோதும் முடங்காமல் இருக்கும்படி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பார் என்று சிஎஸ்கேவின் பௌலிங் பயிற்சியாளர் லஷ்மிபதி பாலாஜி கூறியுள்ளார். பயிற்சியின்போது, பேட்டிங், கீப்பிங் என்று தொடர்ந்து அணியுடன் இணைந்து அவர் பயிற்சி செய்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











