எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனை.. ஜடேஜாவுக்கு காத்திருக்கும் ஜாக்பாட் ரெக்கார்டு!
அபுதாபி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய ஆல் - ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பெரும் ஐபிஎல் சாதனை ஒன்றை செய்ய இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ஆல் - ரவுண்டர்களுக்கு தான் எப்போதும் மரியாதை. டி20 போட்டிகளில்; பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் செயல்படும் வீரர்களையே அணிகள் விரும்புகின்றன.
அந்த வகையில் ஜடேஜா ஐபிஎல் தொடரின் முக்கிய ஆல் - ரவுண்டர்களில் ஒருவர்.

தடையை தாண்டிய ஜடேஜா
2008இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடிய அவர் 2010இல் ஓராண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தடை செய்யப்பட்டார். ஆம், அப்போது வேறு அணிக்கு தாவ அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கிடைத்த தகவலால் அவர் தடை செய்யப்பட்டார். அதையெல்லாம் தாண்டி தற்போது ஐபிஎல் வரலாற்றில் பெரும் சாதனை படைக்க உள்ளார்.

ஜடேஜா செயல்பாடு
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ், குஜராத் லயன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளில் ஆடி உள்ளார் ஜடேஜா இதுவரை 170 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் அவர் 1927 ரன்கள் மற்றும் 108 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.

முதல் ஐபிஎல் வீரர்
அவர் இன்னும் 73 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் 2000 ரன்களை எட்டுவார். அதன மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெரும் சாதனையை படைக்க இருக்கிறார் ஜடேஜா.

10 விக்கெட் சாதனை
இந்த சீசனில் அவர் நிச்சயம் அதிக போட்டிகளில் ஆடுவார் என்பதால் 73 ரன்கள் குவித்து இந்த பெரிய சாதனையை அவர் விரைவில் செய்வார் என நம்பப்படுகிறது. சிஎஸ்கே அணியில் அவர் ஆடிய ஓவ்வொரு சீசனிலும் 10 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி மற்றொரு சாதனையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேன் வாட்சன்
ஜடேஜாவுக்கு பின் இந்த சாதனையை செய்ய வாய்ப்புள்ள முதல் வீரர் ஷேன் வாட்சன். அவர் ஐபிஎல் தொடரில் 3575 ரன்களும், 92 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார். கடந்த சீசனில் பந்து வீசாத அவர், இந்த சீசனில் பந்துவ் வீசினால் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி ஜடேஜாவுடன் சாதனைப் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது.

பிராவோ நிலை
இவர்களை அடுத்து டிவைன் பிராவோ 1483 ரன்கள், 147 விக்கெட்களுடன் இருக்கிறார். அவர் 2000 ரன்களை எட்ட இன்னும் 517 ரன்கள் எடுக்க வேண்டும். எனவே, இந்த சாதனையை செய்யப் போகும் முதல் வீரர் ஜடேஜாவாகத் தான் இருக்க முடியும்.

அதிக விலை
2012இல் இருந்து சிஎஸ்கே அணியில் ஆடி வரும் ஜடேஜா, அந்த அணியால் அதிக விலை கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர். 2012 ஐபிஎல் ஏலத்தில் 9.72 கோடி கொடுத்து வாங்கப்பட்டார் ஜடேஜா. அப்போது முதல் தற்போதைய ஐபிஎல் சீசன் வரை அந்த அணியின் முக்கிய வீரராக வலம் வருகிறார்.

சிறப்பான பேட்டிங்
2௦19 ஐபிஎல் சீசனில் அவரது பேட்டிங் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து இந்திய அணியிலும் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்த நிலையில், 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications