CSK: ஒரே நாளில் 5 பயிற்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய சிஎஸ்கே.. மைக் ஹஸ்ஸி, எரிக் சிம்மன்ஸ் நீக்கம்
சென்னை: ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் இடம் பெற்று இருந்த ஐந்து பேரையும் விடுவித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹஸ்ஸி மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் உட்பட 5 முக்கியப் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அணியிலிருந்து ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மைக் ஹஸ்ஸி மற்றும் எரிக் சைமன்ஸ் ஆகியோருடன் சேர்த்து, பீல்டிங் மற்றும் உதவி பேட்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார், தலைமை பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக், உடற்தகுதி பயிற்சியாளர் கிரெக் கிங் ஆகியோரும் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு முதல் வீரராகவும், 2018 முதல் 2026 வரை பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றிய மைக் ஹஸ்ஸியின் பங்களிப்பை சிஎஸ்கே நிர்வாகம் மனதாரப் பாராட்டியுள்ளது. "மஞ்சள் நிற ஜெர்சியில் உங்கள் அர்ப்பணிப்பு மகத்தானது; ஒருமுறை சூப்பர் கிங் என்றால் எப்போதுமே சூப்பர் கிங் தான்" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.

நீண்ட காலம் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ள ஜாகீர் கானே இந்த ஒட்டுமொத்தப் பயிற்சியாளர் மாற்றத்திற்கும் தலைமை தாங்கியுள்ளார். அணியை முற்றிலும் தனது சொந்த பாணியில் புத்துணர்ச்சியோடு வழிநடத்த விரும்பும் ஜாகீர் கான், தனக்கு நன்கு அறிமுகமான புதிய நிபுணர்களைக் கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, சர்ரே கவுண்டி அணியின் பயிற்சியாளர் காரெத் பேட்டி புதிய உதவிப் பயிற்சியாளராகவும், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா புதிய பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பொறுப்பேற்க உள்ளனர்.
கடந்த சில சீசன்களாக சிஎஸ்கே அணி அடைந்த தொடர் சறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திருப்பவே இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தலைமைப் பயிற்சியாளர் முதல் சப்போர்ட் ஸ்டாஃப் வரை அனைவரையும் மாற்றி, முற்றிலும் புதிய உத்வேகத்துடன் ஐபிஎல் 2027 ஏலத்தை எதிர்கொள்ள சிஎஸ்கே தயாராகி வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

