சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து, வரலாறு காணாத சரிவைச் சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக மிகப் பெரிய அளவில் மாற்றத்தை செய்ய உள்ளது. நவம்பர் 15 க்குள் ஐபிஎல் அணிகள் தங்களின் வீரர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதால் சிஎஸ்கே அணி யார், யாரை விடுவிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
இந்த முறை ஏலத்துக்கு முன் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, அதே சமயம் ஏலத்தில் அதிக பணத்தை வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வீரர்கள் தக்க வைப்பு நடக்கும் என கூறப்படுகிறது. அதற்காக சில வெளிநாட்டு வீரர்களைக் கழற்றிவிடவும் தயாராகி இருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணியின் அசைக்க முடியாத தூண்களாகத் தொடர்கின்றனர். ருதுராஜ், அணியின் நீண்ட கால பேட்டிங் மற்றும் கேப்டன்சிக்கான தேர்வாக பார்க்கப்படுகிறார். ஜடேஜாவின் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என்ற ஆல் ரவுண்ட் திறமை எந்தச் சூழலிலும் அணிக்குச் சமநிலையைக் கொடுப்பதால், அவரை விடுவிக்க வாய்ப்பே இல்லை.
இவர்களுடன், மிடில் ஆர்டரில் சுழற்பந்து வீச்சைத் துவம்சம் செய்யும் சிவம் துபேவும் தக்கவைக்கப்படுவார். வேகப்பந்து வீச்சுத் துறையில் கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ் மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் மீது நம்பிக்கை இருப்பதால் அவர்களும் தொடர்வார்கள்.
வெளிநாட்டு வீரர்களைப் பொறுத்தவரை, அவர்கள் பிரபலமான வீரர்கள் என்பதை தாண்டி, திறமைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். மதீஷா பதிரானாவின் வித்தியாசமான டெத் ஓவர் பந்துவீச்சும், நூர் அஹ்மதின் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சும் விக்கெட்டுகளை வீழ்த்தும் முக்கிய ஆயுதங்களாக இருப்பதால் அவர்கள் சிஎஸ்கே அணியில் தக்க வைக்கப்படுவார்கள்.
இவர்களுடன், டாப் ஆர்டரில் ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மேத்ரே மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடி மன்னன் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோரும் அணியின் எதிர்கால முதலீடுகளாகத் தக்கவைக்கப்படுவார்கள். இவர்களுடன் சிஎஸ்கே-வின் "ஆணி வேர்" தோனியும் தக்க வைக்கப்படுவார்.
டெவான் கான்வே: சிஎஸ்கே-விலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்களில் கான்வே முதன்மையானவராக இருப்பார். அவரது திறமை மீது சந்தேகம் இல்லாவிட்டாலும், டாப் ஆர்டரை மறுசீரமைக்கவும், வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்களை பயன்படுத்தவும் சிஎஸ்கே நிர்வாகம் இந்த முடிவை எடுக்கும்.
சாம் கரன்: ஜடேஜா ஆல்-ரவுண்டர் இடத்தைப் பலமாகப் பிடித்துள்ள நிலையில், சாம் கரனின் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவருக்காகச் செலவிடப்பட்ட பெரும் தொகையை மற்ற வீரர்களுக்காகப் பயன்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிடும் என நம்பலாம்.
இந்திய வீரர்கள்: ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் போன்றோரின் கடந்த சீசன் பங்களிப்புமோசமாக இருந்தது. அவர்கள் தங்களின் ஏல விலைக்கு நியாயம் சேர்க்கவில்லை. எனவே, அவர்கள் சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்படுவார்கள். இவர்களுடன், ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வால் கிடைக்கும் ₹9.75 கோடியும் சிஎஸ்கே-வின் ஏலதிற்கான நிதியை அதிகப்படுத்தும்.
நாம் மேலே கூறியபடி செய்தால், சிஎஸ்கே சுமார் 16 வீரர்களை ₹89 கோடிக்குத் தக்கவைத்து, ஏலத்திற்கு சுமார் ₹31 கோடியுடன் செல்லும். இந்தத் தொகையைக் கொண்டு, சிஎஸ்கே மூன்று முக்கிய இடங்களைக் குறிவைக்கும்:
ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, மதீஷ பதிரானா, நூர் அஹ்மத், சிவம் துபே, நாதன் எல்லிஸ், டிவால்ட் பிரெவிஸ், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மேத்ரே, உர்வில் படேல், ஆந்த்ரே சித்தார்த், கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, அன்ஷுல் கம்போஜ், ஷேக் ரஷீத்.