CSK: இனியும் பொறுக்க முடியாது.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே அணியில் இருந்தே நீக்கும் நேரம்!
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடிய போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் சொதப்பி ரசிகர்களை ஏமாற்றினார். இந்த முக்கியமான போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்த ருதுராஜ், 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை
2026 ஐபிஎல் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ் கெய்க்வாட், மொத்தம் 60 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவரின் பேட்டிங் சராசரி 12.6 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 105.0 ஆகவும் சரிந்துள்ளது. ஒரு தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் களமிறங்கும் வீரர் இவ்வளவு குறைந்த வேகத்தில் ரன் சேர்ப்பது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

2026 ஐபிஎல் தொடரின் முதல் 5 போட்டிகளில் ருதுராஜ் எடுத்த ஸ்கோர் விபரம்:
6 (11 பந்துகள்)
28 (22 பந்துகள்)
7 (3 பந்துகள்)
15 (18 பந்துகள்)
7 (6 பந்துகள்)
சஞ்சு சாம்சன் தரும் நெருக்கடி
சிஎஸ்கே அணியில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளார். அனுபவம் வாய்ந்த ஒரு கேப்டன் அணியில் இருக்கும்போது, ருதுராஜ் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புவது அவர் மீதான அழுத்தத்தை பன்மடங்கு அதிகரித்துள்ளது. சஞ்சு சாம்சன் போன்ற திறமையான வீரர் அணியில் இருக்கும்போது, ருதுராஜ் கேப்டன் என்ற முறையில் மட்டும் அணியில் நீடிப்பது சரியாக இருக்காது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களின் கொந்தளிப்பு
ருதுராஜின் இந்த மோசமான பார்ம் காரணமாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். "ருதுராஜை அணியிலிருந்து நீக்கினால் மட்டுமே சிஎஸ்கே அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற முடியும்" என்றும், அவர் தற்போது அணிக்கு ஒரு பலவீனமாக மாறிவிட்டார் என்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அடுத்த 2 போட்டிகள் ருதுராஜின் எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதில் அவர் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்கத் தவறினால், கேப்டன் என்ற பதவியைத் தாண்டி, சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்தே அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அணி நிர்வாகம் அவருக்கு இன்னும் எத்தனை வாய்ப்புகளை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. ஆயுஷ் மத்ரே 38, சஞ்சு சாம்சன் 48, பிரெவிஸ் 41 ரன்கள் சேர்த்தனர்.மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.


Click it and Unblock the Notifications