CSK: சிஎஸ்கே-வுக்கு வந்த உடன் கேப்டன் பதவி கேட்பதா? நெகிழ வைத்த சஞ்சு சாம்சன்.. என்ன சொன்னார்?
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என சில ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். சஞ்சு சாம்சன் இதுகுறித்து முதன்முறையாக வாய் திறந்துள்ளார். அவர் சொன்ன ஒரு கருத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. 2026 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து 18 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணிக்கு மாறினார் சஞ்சு சாம்சன்.
அப்போது முதல், தோனி மற்றும் ருதுராஜுக்குப் பிறகு சிஎஸ்கே அணியை வழிநடத்தப்போகும் அடுத்த கேப்டன் சஞ்சு தான் என சமூக வலைதளங்களில் பலத்த பேச்சு எழுந்தது. இது குறித்து மூத்த வீரர் அஸ்வின் கூறுகையில், "நான் ஒன்றும் ஜோசியர் இல்லை, ஆனால் ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியை வழிநடத்துவதை என்னால் பார்க்க முடிகிறது. அது எப்போது நடக்கும் எனத் தெரியவில்லை, ஆனால் நிச்சயம் நடக்கும்" என கூறியிருந்தது இந்த விவாதத்தை மேலும் சூடாக்கியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ 'பாட்காஸ்ட்' நிகழ்ச்சியில் அபினவ் முகுந்துடன் கலந்து கொண்ட சஞ்சு சாம்சன், கேப்டன் பதவி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறுகையில், "உண்மையைச் சொல்லப்போனால், நாம் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும்போது, அங்கு பல நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்கக்கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன்" என மிக எளிமையாக பதிலளித்தார். அதாவது, சிஎஸ்கே அணி என்ற புதிய குடும்பத்தில் ஒரு வீரராக இணைந்ததே மிகப்பெரிய விஷயம் என்றும், அங்கு சென்றவுடன் தனக்கு கேப்டன் பதவி வேண்டும் என கேட்பது முறையல்ல என்பதையும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிஎஸ்கே அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதனும் இதே கருத்தைத் தான் வெளிப்படுத்தியிருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திறன் படைத்தவர் என்றும், அவரது தலைமையிலான அணி சிறப்பாக செயல்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயரைப் போலவே சஞ்சு சாம்சனும் ஒரு சிறந்த கேப்டன் என்றாலும், தொடக்கத்திலேயே அவர் மீது கேப்டன் என்ற கூடுதல் அழுத்தத்தை சுமத்த சிஎஸ்கே அணி நிர்வாகம் விரும்பவில்லை. சஞ்சுவின் பேட்டிங் திறமை மீது தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டிருந்தார்.
சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் சஞ்சு சாம்சன் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2 சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 402 ரன்களைக் குவித்துள்ளார். கேப்டன் பதவி குறித்து கவலைப்படாமல் ரன்களைக் குவிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் சஞ்சுவின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறை சென்னை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீசனில் அவரது அதிரடி ஆட்டம் சிஎஸ்கே அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
