CSK: தோனியாக மாறிய சஞ்சு சாம்சன்.. அபிஷேக் விக்கெட் கிடைக்க காரணமே அவர்தான்.. என்ன நடந்தது?
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், அபிஷேக் சர்மாவின் அபாரமான ஆட்டம் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது. அவர் அவுட் ஆவது போலத் தெரியவில்லை, அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை. ஏன், பந்துவீச்சாளர் கூட அது அவுட் என்பதில் உறுதியாக இல்லை. ஆனால், சஞ்சு சாம்சன் மட்டுமே பிடிவாதமாக இருந்து அந்த விக்கெட் கிடைக்க காரணமாக இருந்தார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், சன்ரைசர்ஸ் வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார். சிஎஸ்கே பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த அவர், வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் 3-வது அதிவேக அரைசதம் என்ற சாதனையைப் படைத்தார். அவர் ஆடிய விதத்தைப் பார்த்தால் ஹைதராபாத் அணி 250 ரன்களைத் தாண்டும் என்றே தோன்றியது.

அப்போது ஆட்டத்தின் 8-வது ஓவரை ஜேமி ஓவர்டன் வீசினார். அந்த ஓவரின் கடைசிப் பந்தை அபிஷேக் சர்மா தட்டிவிட முயன்றார். பந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைக்குச் சென்றது. அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். பந்துவீச்சாளர் ஓவர்டன் உட்பட சிஎஸ்கே அணியின் மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் முறையிடவில்லை. ஆனால், விக்கெட் கீப்பராக இருந்த சஞ்சு சாம்சன் மட்டும் பந்து பேட்டில் பட்டதை மிகச்சரியாகக் கணித்தார்.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் சென்று கண்டிப்பாக ரிவியூ எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார் சாம்சன். சஞ்சுவின் அதீத நம்பிக்கையைப் பார்த்த ருதுராஜ் உடனடியாக ரிவியூ கேட்டார். ரீப்ளேவில் பந்து பேட்டில் மிக லேசாக உரசிச் சென்றது அல்ட்ரா எட்ஜ் தொழில்நுட்பத்தில் உறுதியானது. இதனால் 22 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா வெளியேறினார்.
இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சஞ்சு சாம்சனை மகேந்திர சிங் தோனியுடன் ஒப்பிட்டுப் பாராட்டி வருகின்றனர். "டிஆர்எஸ் எடுப்பதில் தோனியைப் போலவே சஞ்சுவும் கில்லாடியாக இருக்கிறார்" என்றும், அவரை 'டிசிஷன் ரிவியூ சாம்சன்' என்றும் புகழ்ந்து வருகின்றனர். இந்த விக்கெட் மட்டும் விழவில்லை என்றால் சிஎஸ்கே அணியின் நிலை இன்னும் மோசமாகி இருக்கும்.
இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், முகேஷ் சவுத்ரி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசனும் 59 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணி 184 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications