நெருப்பு பேரோட... நீ கொடுத்த ஸ்டாரோட... தோனியின் கலக்கல் வீடியோ வெளியிட்ட சிஎஸ்கே
சென்னை : கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தோனியை ஐபிஎல் போட்டிகளில் காணும் அவரது ரசிகர்களின் கனவு நிராசையாகியுள்ளது.
Recommended Video
இந்நிலையில், கேப்டன் எம்எஸ் தோனியின் பல வீடியோக்கள், புகைப்படங்களை சிஎஸ்கே அடிக்கடி தனது வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திருப்திபடுத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது ஹோட்டல் அல்லது மைதானத்திலிருந்து பேருந்தில் செல்வதற்கு முந்தைய தோனியின் வீடியோவை தனது வலைதளத்தில் சிஎஸ்கே பதிவிட்டுள்ளது. பின்புறத்தில் ஓடவிடப்பட்டுள்ள சூப்பர்ஸ்டாரின் 'சும்மா கிழி' பாடல் அந்த வீடியோவிற்கு சரியாக பொருந்துகிறது.

3 ஐபிஎல் கோப்பைகள் வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் மகேந்திர சிங் தோனி, அந்த அணிக்காக சிறப்பாக செயலாற்றி 3 கோப்பைகளை பரிசாக அளித்தவர். தோனியை சென்னை ரசிகர்கள் தங்களின் 'தல'யாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு சென்னை ரசிகர்களின் மற்றும் சென்னையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளார் தோனி.

ரசிகர்கள், தோனி காத்திருப்பு
கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஐபிஎல் போட்டிகள் மூலம் தோனி, சர்வதேச போட்டிகளில் குறிப்பாக டி20 உலக கோப்பை தொடரில் இடம்பெறுவார் என்ற ரசிகர்களின் கனவு தகர்ந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளை எதிர்நோக்கி ரசிகர்கள் மட்டுமின்றி தோனியும் காத்திருக்கிறார்.
பல்சுவை வீடியோக்கள்
இந்நிலையில், தன்னுடைய அணியின் கேப்டனை விதவிதமாக தன்னுடைய வலைதளத்தில் பதிவிட்டு வருகிறது சிஎஸ்கே. கடந்த மார்ச் மாதத்தில் பயிற்சிக்கு முன்னதாகவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சி மேற்கொண்டபோது, திருவிழா கூட்டம் போல காணப்பட்ட ரசிகர்கள் மத்தியில் அவர் மேற்கொண்ட பயிற்சியின் ஷாட்களையும் பதிவு செய்து லைக்குகளை அள்ளியது.

பாடல்களுடன் வீடியோக்கள்
இந்நிலையில், தற்போது கொரோனா காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நிலையில், தோனியை விட்டு வைக்கவில்லை சிஎஸ்கே. தொடர்ந்து அவரது வீடியோக்களை தமிழ் பாடல்களுடன் பதிவிட்டு இருதரப்பு ரசிகர்களையும் கொள்ளை கொண்டு வருகிறது. இதனால் தொடர்ந்து லைக்குகளும் கமெண்ட்டுகளும் அள்ளுகிறது.

கைகளில் திராட்சை... வாயில் புன்னகை
தற்போது தோனி ஹோட்டல் அறையிலிருந்தோ அல்லது மைதானத்திலிருந்தோ வெளிவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது சிஎஸ்கே. அப்போது அவர் கையில் திராட்சை கொத்தும், முகத்தில் புன்னகையும், பின்புலத்தில் சூப்பர்ஸ்டாரின் 'சும்மா கிழி' பாடலும் என அமர்க்களப்படுகிறது அந்த வீடியோ. தொடர்ந்து பேருந்தில் ஏறி செல்கிறார் 'தல'. இதற்கு 'ஸ்வீட் கிங் இங்கே' என கேப்ஷன் போட்டுள்ளது சிஎஸ்கே.


Click it and Unblock the Notifications