Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: ஐபிஎல் தொடருக்கு முன் மனைவியை விவாகரத்து செய்த சிஎஸ்கே வீரர் ராகுல் சஹார்.. 15 மாத போராட்டம்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான ராகுல் சஹார் தனது மனைவி இஷானி ஜோஹரை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ள நிலையில், இந்தச் செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது மனைவியைப் பிரிந்து விவாகரத்து பெறும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பட்டியலில் தற்போது ராகுல் சஹாரும் இணைந்துள்ளார்.

CSK Star Rahul Chahar Announces Divorce From Wife Ishani Johar After 15-Month Legal Battle Ahead of IPL 2026

நீதிமன்றத்தில் கடந்த 15 மாதங்கள்

தனது விவாகரத்து குறித்து ராகுல் சஹார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக நீண்ட மற்றும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 15 மாதங்களாகத் தான் சந்தித்த சட்டப் போராட்டங்கள் குறித்தும், அது தனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் குறித்தும் அவர் மனம் திறந்துள்ளார்.

"நான் மிகச் சிறிய வயதிலேயே திருமண பந்தத்தில் நுழைந்துவிட்டேன். என்னைப் பற்றியோ, எனது தகுதி குறித்தோ அல்லது எனது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியோ முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு முன்பே இது நடந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகள் நான் சற்றும் எதிர்பாராத பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தன. கடந்த 15 மாதங்களாக நீதிமன்றங்களில் அலைந்தது எனக்குப் பொறுமையையும், மன உறுதியையும் கற்றுக் கொடுத்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோபமோ வருத்தமோ இல்லை

தொடர்ந்து அந்தப் பதிவில், "சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்குப் பிறகு இன்று எனது வாழ்க்கையின் அந்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த அத்தியாயத்தை நான் கோபத்துடனோ அல்லது வருத்தத்துடனோ முடிக்கவில்லை. மிகவும் தெளிவாகவே இந்த முடிவை எடுத்துள்ளேன். சில உறவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிப்பதில்லை, அவை நம்மை விழிப்படையச் செய்யவும், சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவுமே வருகின்றன" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இது ஒரு முடிவு அல்ல. இது ஒரு புதிய தொடக்கம். இனி நான் எடுக்கும் முடிவுகள் எனது சுயமரியாதை மற்றும் அமைதியைச் சார்ந்தே இருக்கும். எந்தவொரு கசப்பான உணர்வுகளையும் நான் சுமந்து செல்லவில்லை. பாடங்களையும், கண்ணியத்தையும், மீண்டும் தொடங்குவதற்கான தைரியத்தையும் மட்டுமே எடுத்துச் செல்கிறேன்" என்று அவர் அந்தப் பதிவில் முடித்துள்ளார்.

காதலித்து நடந்த திருமணம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் உறவினரான ராகுல் சஹார், இஷானி ஜோஹரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். நண்பர்கள் மூலம் அறிமுகமான இவர்கள் சில ஆண்டுகள் காதலித்த பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்கள் இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து பெற்றுள்ளனர்.

ராகுல் சஹாரின் கிரிக்கெட் பயணம்

தனது 20 வயதில் 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ராகுல் சஹார், இதுவரை 6 டி20 போட்டிகளிலும், ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை 2017ஆம் ஆண்டு அறிமுகமான இவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மாவின் தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டார். அதன்பிறகு 2022 முதல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2025ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவரை, கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5.2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. ஐபிஎல் தொடரில் இதுவரை 79 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 75 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 21, 2026, 9:02 [IST]
Other articles published on Feb 21, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+