சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. தற்போது புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்று மூன்று தோல்விகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.
சிஎஸ்கே அணி தொடர்ந்து வெற்றியை பெற்றால் மட்டுமே புள்ளி பட்டியலில் மேலே செல்ல முடியும். சிஎஸ்கே அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்றுமே மோசமாக இருப்பதால் இம்முறை கடினம் தான் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடினாலும் சிஎஸ்கே போட்டியை பார்க்க வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால் அந்த ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் டிக்கெட் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிக்கான டிக்கெட் உண்மையான ரசிகர்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது.
இதனால் டிக்கெட்டை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என ஆன்லைனில் சென்ற ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. வெறும் 1500 பேர் தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இணையத்தில் காட்டப்பட்டது. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் ஒரு டிக்கெட் கூட இல்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது ரசிகர்களை ஏமாற்றும் செயல் என்றும் இது குறித்து உடனடியாக பிசிசிஐ தலையிட வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கான போட்டிகளில் இணையதளத்தில் இருந்து டிக்கெட் பெறும் நபர்கள் மிகவும் குறைவு என்றும் மற்றவர்களுக்கெல்லாம் ஸ்பான்சர் டிக்கெட் வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
இதன் மூலம் சினிமா நடிகைகள், டிவி சீரியல் நடிகைகள் சமூக வலைத்தள பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கு மட்டும் தான் டிக்கெட் ஸ்பான்சர் செய்யப்படுவதாகவும் உண்மையான ரசிகர்களுக்கு டிக்கெட்டே கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர் ஒருவர், மும்பை சிஎஸ்கே அணி விளையாடிய போட்டியில் கோலி ஏன் இன்னும் பேட்டிங் செய்ய வரவில்லை என்று ஒரு பெண் கேட்டதாகவும் இப்படி கிரிக்கெட்டை தெரியாதவர்களுக்கு மட்டும்தான் டிக்கெட்டுகள் கிடைப்பதாகவும் புகார் கூறியுள்ளனர்.