சொங்கி மாதிரி விளையாடி 3வது இடத்துக்குப் போய் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை: முக்கியப் போட்டிலில் சொதப்பலாக ஆடியும், ரன் ரேட்டை உயர்த்தத் தவறியதாலும், உச்சகட்டமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசிப் போட்டியில் அபாரமாக ஆடி ரன் ரேட்டைக் குவித்து விட்டதாலும் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு தற்போது இறுதிப் போட்டிக்குள் நுழைவதில் இரட்டைச் சிக்கலைச் சந்தித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.
நம்மை விட கொல்கத்தாவின் ரன் ரேட் கடைசி நேரத்தில் உயர்ந்து போனதால் நாம் 2வது இடத்திலிருந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டோம். இதனால் நமக்கு தற்போது இரட்டை சவால் காத்திருக்கிறது.
எலிமினேட்டர் போட்டியில் நாம் முதலில் மும்பை இந்தியன்ஸை வென்றாக வேண்டும். அதன் பின்னர் முதல் குவாலிபயர் போட்டியில் தோற்கும் அணியையும் வென்றாக வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்குப் போக முடியும்.
ஆனால் நம்மை பின்னுக்குத் தள்ளி விட்டு 2வது இடத்துக்குப் போய் விட்ட கொல்கத்தாவுக்கு முதல் குவாலிபயர் போட்டியில் தோற்றாலும் பிரச்சினை இல்லை. 2வது வாய்ப்பும் அவர்களுக்கு உள்ளது என்பதால் நம்மை விட பெட்டராக அவர்கள் பீல் செய்து விளையாடலாம்.

அசமஞ்சம்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் சுற்றுப் போட்டியில் சிறப்பாக ரன் குவித்தும் கூட மெத்தனமான பந்து வீச்சால் மேக்ஸ்வெல்லிடம் சிக்கி தோல்வியைத் தழுவ நேரிட்டது.

அடுத்தடுத்து சில தோல்விகள்
அதன் பின்னர் சில முக்கியமான தோல்விகளையும் சென்னை சந்தித்தது. இதற்கும் காரணம் மோசமான பந்து வீச்சுதான். இதை டோணியே கூட ஒத்துக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து 3 தோல்விகள்
அதை விட முக்கியமாக லோ ஸ்கோரில் 3 முக்கியமான தோல்விகளை தொடர்ந்து நாம் சந்தித்ததால் ரன் ரேட் இறங்கி வந்து விட்டது.

பதான் போட்ட போடு
இதற்கு முத்தாய்ப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக - அது அவர்களுக்கு வாழ்வா சாவா போட்டி - அபாரமாக ஆடி விட்டது. குறிப்பாக யூசன் பதான் போட்ட போட்டால், அவர் அடித்த அந்த அதி வேக 72 ரன்களால் ரன் ரேட் ஏறிப் போய், சென்னையை 3வது இடத்திற்குத் தள்ளி விட்டு விட்டனர்.

அதிரடி வீரர் யாருமே இல்லையே
இப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாபை எடுத்துக் கொண்டால் மேக்ஸ்வெல் பேய் வேக வீரராக இருக்கிறார். ஒரு வேளை அவரை விட்டால் மில்லர் இருக்கிறார். அவரும் கைவிட்டால் சஹா இருக்கிறார். கேப்டன் பெய்லியும் கரம் கொடுப்பார். அதேபோலத்தான் பதான், கோரி ஆண்டர்சன் ஆகியோரும் அவரவர் அணிகளுக்கு பேயாட்டம் போடக் கூடியவர்களாக உள்ளனர். சென்னையில் வேயன் ஸ்மித்தை விட்டால் அப்படி ஒரு ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இனி வரும் போட்டிகளிலாவது...!
இப்போது சென்னைக்கு 2 சவால்கள் உள்ளன. முதலில் மும்பையைத் தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும். அடுத்து 2வது குவாலிபயர் போட்டிக்கு வரும் அணியை உதைத்து அனுப்ப வேண்டும். இதைச் செய்தால்தான் இறுதிப் போட்டியைப் பற்றி நாம் நினைக்க முடியும்.


Click it and Unblock the Notifications