எல்லாமே போச்சு.. 2 மடங்கு சிக்ஸ், அதிக ரன்.. மூன்றே மேட்ச்சில் தோனியை முந்திய வைபவ் சூர்யவன்ஷி!
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் மூத்த வீரரான தோனியின் ஆட்டத்தை மூன்றே போட்டிகளில் முந்தி இருக்கிறார் 14 வயதான இளம் ஐபிஎல் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இதுவரை மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் நிலையில், ஐபிஎல் வரலாற்றை புரட்டிப் போடும் சம்பவங்களை அவர் செய்திருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்று இருக்கும் அவர், ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயத்தில் சிக்கியதால், அவருக்கு பதிலாக துவக்க வீரராக வைபவ் சூர்யவன்ஷி விளையாடி வருகிறார்.

அவர் தனது முதல் போட்டியில், தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். அந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்திருந்தார். அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 12 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடுத்து தான் விளையாடிய மூன்றாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து, 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் வைபவ். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றின் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மூன்று போட்டிகளில் மொத்தம் 151 ரன்கள் எடுத்திருக்கிறார்.
நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் அவர் 11 சிக்ஸர்களை அடித்திருந்தார். இது அதற்கு முந்தைய போட்டிகளில் 5 சிக்ஸர்களை அடித்து இருந்தார். அதன் மூலம் இந்த ஆண்டு அவர் இதுவரை 16 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார்.
இதன் மூலம், 2025 ஐபிஎல் தொடரில் தோனி இதுவரை அடித்த ரன்களையும், சிக்ஸர்களின் எண்ணிக்கையையும், மூன்றே போட்டிகளில் முந்தி இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் 43 வயதான தோனி, 9 போட்டிகளில் விளையாடி 140 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதுவரை 8 சிக்ஸர்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடர்களில் ஒட்டுமொத்தமாக கடைசி ஓவர்களில் தோனி அதிக சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தவராக இருக்கிறார். ஆனால் இந்த ஆண்டு அவரால் பெரிய அளவில் அதிரடி ஆட்டத்தை ஆட முடியவில்லை. இந்த நிலையில், தோனி 9 போட்டிகளில் எடுத்த 140 ரன்கள் எடுத்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி மூன்றே போட்டிகளில் 151 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும், ஒன்பது போட்டிகளில் தோனி 8 சிக்ஸர்கள் அடித்திருக்கும் நிலையில், வைபவ் சூர்யவன்ஷி மூன்றே போட்டிகளில் அதை விட இரண்டு மடங்கு சிக்ஸர்கள் அடித்து, சிக்ஸர்கள் எண்ணிக்கையில் தோனியை முந்தி இருக்கிறார். இதன் மூலம், 2025 ஐபிஎல் தொடரில் மிக இளம் வயது வீரரும் அதிக வயது வீரரும் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கான ஆடுகளமாக மாறி வருகிறது என்பதையும் இது உணர்த்துகிறது.


Click it and Unblock the Notifications