CSK vs DC: ஆட்டத்தையே மாற்றிய பந்து.. ராகுலை வீழ்த்திய பின் அகில் ஹொசைன் செய்த முகமூடி கொண்டாட்டம்
ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் எதிரான ஆட்டத்தில், சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் அகில் ஹுசைன் , டிசி அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுலை வெளியேற்றி முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தினார். டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் அக்சர் படேல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
சென்னை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கே.எல். ராகுல் ரன் குவிக்க திணறினார். 13 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்து 92.31 ஸ்ட்ரைக் ரேட்டுடன் வெளியேறினார். ஆறாவது ஓவரின் முதல் பந்தில் அகில் ஹுசைனின் பந்தை உயரத்திற்கு தூக்கி அடித்தபோது, பந்து சரியாக பேட்டில் படவில்லை.

இதன் விளைவாக, ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஐபிஎல் 2026 சீசனில் கே.எல். ராகுல் சிறப்பான ஃபார்மில் இருந்ததால், அவரது விக்கெட் சிஎஸ்கே அணிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது.நடப்பு சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 445 ரன்கள் குவித்து, 180.89 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ராகுல் முதலிடத்தில் இருந்தார்.
டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்த போதிலும், கே.எல். ராகுல் மற்றும் பதும் நிஸ்ஸங்கா ஆகிய இரு முக்கியமான தொடக்க வீரர்களையும் தொடக்கத்திலேயே இழந்தது. நான்காவது ஓவரில் முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து நிஸ்ஸங்கா ஓரளவுக்கு ரன் சேர்க்கத் தொடங்கினார்.
இருப்பினும், அதே ஓவரில் லெஃப்ட் ஆர்ம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி நிஸ்ஸங்காவை அவுட்டாக்கி பதிலடி கொடுத்தார். 15 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்த நிஸ்ஸங்கா, மிட்-ஆனில் இருந்த டேவால்ட் பிரேவிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர்பிளே முடிவில் டெல்லி அணி 37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. இந்த போட்டி அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் அவர்கள் புள்ளிப்பட்டியலில் முன்னேற வேண்டும் என்று எண்ணினர்.
தற்போது ஒன்பது ஆட்டங்களில் நான்கு வெற்றிகள் மற்றும் ஐந்து தோல்விகளுடன் ஏழாவது இடத்தில் டெல்லி அணி உள்ளது. அதே சமயம், சென்னை அணி ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் நிகர ரன் ரேட் 0.005 ஆக இருப்பதால், அவர்கள் புள்ளிப்பட்டியலில் டெல்லி அணியை விட ஒரு இடம் முன்னிலையில் இருந்தனர். எனவே இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


Click it and Unblock the Notifications

