சென்னை: சர்வதேச கிரிக்கெட்டை போல் ஐபிஎல் தொடரில் பேட்டிங் ஆர்டரில் மாற்றி மாற்றி இறங்கி ரன்கள் சேர்க்க பழகிவிட்டதாக டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கேஎல் தெரிவித்துள்ளார். பவர் பிளே ஓவர்களில் முதல் பந்தில் இருந்தே அட்டாக் செய்ய பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், கடைசி வரை களத்தில் இருந்து கூடுதலாக 20 ரன்களை குவிக்க தவறிவிட்டதாகவும் புலம்பி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 183 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெறும் 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் ஆடிய கேஎல் ராகுல் 77 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார். இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுல் பேசுகையில், பேட்டிங் ஆர்டர் மாற்றி மாற்றி களமிறங்குவதற்கு பழகிவிட்டேன். இந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக டாப் ஆர்டரில் விளையாடுவதற்காக தான் தயாராகி கொண்டிருந்தேன். ஆனால் ஐபிஎல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன், பயிற்சியாளருடன் பேசினேன்.
அப்போது அவர் நம்பர் 4 வரிசையில் பேட்டிங் ஆட வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். முக்கியமான ஒரு வீரர் கடைசி நேரத்தில் வராததால், அந்த இடத்தை எனக்கு அளித்தனர். அதனால் எந்த கவலையும் இல்லாமல், அந்த பணியை தொடங்கினேன். ஆனால் இன்று மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கியது மகிழ்ச்சி அளித்தது. கடைசி நேரத்தில் பேட்டிங் ஆர்டர் மாற்றி ஆட மனநிலை சரியாக வைத்திருக்க வெண்டும்.
அதேபோல் சூழலுக்கு ஏற்ப தயாராகி கொள்ள வேண்டும். அதேபோல் பேட்டிங் செய்வதற்கு முன்பாக சில பயிற்சியை மேற்கொள்வேன். அது உதவியாக இருக்கிறது. பேட்டிங் ஆர்டர் மாற்றப்படும் போது, சில நேரங்களில் செட்டிலாக நேரம் பிடிக்கும். அதுமட்டுமே எனக்கு சவாலாக இருக்கிறது. முதல் சில பதற்றமான நிமிடங்களுக்கு பின் பேட் மற்றும் பந்துக்கு இடையிலான ஆட்டமாக மாறிவிடும்.
ஆனால் அதனை மாற்றி கொள்ள தயாராகி வருகிறேன். முதல் 2 - 3 பந்துகளில் டாட் வைக்காமல், முதல் பந்தில் இருந்தே அட்டாக் செய்ய தயாராகி வருகிறேன். இன்றைய இன்னிங்ஸில் சிறப்பாக தொடங்கி, மிடில் ஓவர்களில் நிதானமாக இருந்தேன். எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தது என்று சொல்ல வேண்டும். தொடக்கத்தில் போரெல் உள்ளே வந்து ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுத்து கொண்டார்.
அந்த 20 முதல் 25 ரன்கள் போட்டியை சிறப்பாக தொடங்க உதவியது. டி20 கிரிக்கெட் அப்படிதான் இப்போது மாறிவிட்டது. 7 பந்துகளில் 20 ரன்கள் அடித்தால், விரைவாக ஆட்டத்தை மாற்ற முடியும். அபிஷேக் போரெல், அக்சர் படேலின் ஆட்டம் என் மீதான அழுத்தத்தை குறைத்துவிட்டது. அதேபோல் நாங்கள் தவறான நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம்.
சில பவுலர்களை குறி வைத்து அடிக்க முயற்சித்தேன். ஆனால் அது நடக்கவில்லை. கடைசி நேரத்தில் கூடுதலாக 20 ரன்களை சேர்த்திருக்க வேண்டும். அடுத்த முறை அதனை சரி செய்ய முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.