CSK vs DC: சிஎஸ்கே அணியை காலி செய்வதே ருதுராஜ் தான்.. பந்து எங்கே வருது? என திணறிய கேப்டன்!
சென்னை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்க முடியாமல் திணறியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்தான் சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2026 ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. நடப்புத் தொடரில் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானது. கடந்த ஆண்டும் சென்னை அணி கடைசி இடத்தைப் பிடித்ததால், இந்த முறை வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கடும் அழுத்தத்தில் அந்த அணி களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்குத் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் களம் கண்டனர். சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். ஆனால், மறுபுறம் நின்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ரன் எடுக்க முடியாமல் திணறினார். டி-20 போட்டி என்பதை மறந்து டெஸ்ட் போட்டி போல விளையாடிய அவர், நிறைய பந்துகளை வீணடித்தார்.
சஞ்சு சாம்சன் 200 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் பந்துகளைச் சிதறடித்த போது, ருதுராஜால் 100 ஸ்ட்ரைக் ரேட்டைக் கூட தாண்ட முடியவில்லை. 18 பந்துகளைச் சந்தித்த அவர், ஒரே ஒரு பவுண்டரியுடன் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இக்கட்டான சூழலில் கேப்டனே பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தது சென்னை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ருதுராஜ் வெளியேறிய பின் வந்த இளம் வீரர் ஆயுஷ் மத்ரே, சஞ்சு சாம்சனுக்கு இணையாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களின் சரவெடி ஆட்டத்தால் சென்னை அணி 13 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எட்டியது. ருதுராஜ் மட்டும் பந்துகளை வீணடிக்காமல் இருந்திருந்தால், சென்னை அணி இன்னும் இமாலய ஸ்கோரை எட்டியிருக்கும் என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications