CSK vs GT: 8 ஓவரில் 107 ரன் குவித்தும் சிஎஸ்கே ஸ்கோர் வெறும் 158.. சேப்பாக்கத்தில் நடந்தது என்ன?
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி 8 ஓவர்களில் 107 ரன்கள் குவித்த போதும் 20 ஓவர்களில் மொத்தம் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு காரணமே முதலில் ஆடிய டெஸ்ட் மேட்ச் ஆட்டம் தான். முதல் 12 ஓவர்களில் வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்து கிரிக்கெட் உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டி20 போட்டியில் 50 ரன்களை எட்ட 12 ஓவர்களா என மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் தலையில் கைவைத்து புலம்பினர். ஆட்டத்தின் கடைசி 8 ஓவர்களில் அதிரடியாக 107 ரன்களை குவித்து சிஎஸ்கே சற்று சுதாரித்தாலும், ஆரம்பத்தில் செய்த மாபெரும் தவறால் குஜராத் அணியிடம் மிக எளிதாக தோல்வியைத் தழுவியுள்ளது.

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வெற்றி பெற வேண்டிய முக்கியமான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் தொடக்கம் படுமோசமாக அமைந்தது. குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆட்டம் டி20 பாணியில் இருந்து மெல்ல மெல்ல டெஸ்ட் போட்டி போல மாறியது. 12 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு சிஎஸ்கே அணி 51 ரன்களை மட்டுமே தட்டுத்தடுமாறி எடுத்திருந்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், தான் சந்தித்த முதல் 37 பந்துகளில் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்ட முடியாமல் அவர் திணறிய இந்த மந்தமான பேட்டிங் அணுகுமுறையே அணியின் ஸ்கோர் அதலபாதாளத்திற்கு செல்ல முக்கிய காரணமாக அமைந்தது.
இதன் பின்னர் சுதாரித்துக்கொண்ட சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள், கடைசி 8 ஓவர்களில் அதிரடி காட்டி 107 ரன்களை குவித்தனர். குறிப்பாக, ஆமை வேகத்தில் ஆடி வந்த ருதுராஜ், திடீரென விஸ்வரூபம் எடுத்து அடுத்த 23 பந்துகளில் 54 ரன்களை வெளுத்து வாங்கினார். அவருக்குத் துணையாக, இறுதி கட்டத்தில் களமிறங்கிய ஜேமி ஓவர்டன் வெறும் 6 பந்துகளில் 18 ரன்களும், கார்த்திக் சர்மா 9 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து சரவெடியாக வெடித்தனர். இவர்களின் இந்த அதிரடியால் மட்டுமே சிஎஸ்கே அணி 150 ரன்களை தாண்டி, 20 ஓவர்கள் முடிவில் 158 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்ய பெரிய அளவில் சாதகமாக இல்லை என்பது பலரும் அறிந்ததே. இந்த ஆடுகளத்தில் ரன் குவிப்பது சவாலானது என்றாலும், 12 ஓவர்களுக்கு 51 ரன்கள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத மிக மோசமான பேட்டிங்காகவே விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. முதல் பாதி ஆட்டத்தில் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் காட்டிய இந்த அதிகப்படியான மெத்தனத்தால், அவர்கள் நிர்ணயித்த 159 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸ் அணி எவ்வித நெருக்கடியும் இன்றி மிக எளிதாக சேஸிங் செய்து அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் சிஎஸ்கே அடைந்துள்ள இந்த படுதோல்வி ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications
