அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீசிக் கொண்டிருந்தபோது சிவம் துபே மற்றும் மதீஷா பதிரானா தோனி சொன்னதைக் கேட்காமல் நடந்து கொண்டனர். அதைப் பார்த்த தோனி வெறுப்படைந்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சுதாரித்தனர்.
அதற்கு அடுத்த ஓவரிலேயே சிஎஸ்கே அணி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதற்கு இந்த சம்பவமும் முக்கிய காரணமாக அமைந்தது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ரன் குவித்து 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் சேர்த்தது.
அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது அந்த அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன் ஷாருக்கான் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். மூன்று விக்கெட் இழந்த நிலையில் அந்த அணி வேகமாக ரன் குவிக்கும் முயற்சியில் இருந்தது.
அப்போது பத்தாவது ஓவரை சிவம் துபே வீசினார். அவர் தோனி சொன்னது போல பந்து வீசாமல் சற்று சொதப்பினார். மேலும் ஃபீல்டிங் நின்றிருந்த பதிரானாவும் தோனி சொன்ன இடத்தில் நிற்காமல் சற்று இடம் மாறி நின்றார். அந்த ஓவரின் கடைசி பந்தில் சாய் சுதர்சன் 2 ரன்கள் எடுத்தார். அப்போது தோனி அவர்கள் இருவரும் செய்ததைப் பார்த்து வெறுப்படைந்தார்.
தோனி கோபப்பட்டதைப் பார்த்த அவர்கள் இருவரும் அடுத்த ஓவரில் சுதாரிப்புடன் நின்றனர். 11-வது ஓவரை ரவீந்திர ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷாருக்கான் பதிரானாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் சாய் சுதர்சன் சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தோனி வெறுப்படைந்ததைப் பார்த்தவர்கள் இருவரும் சுதாரிப்பாக இருந்ததோடு தோனி சொன்ன இடத்தில் சரியாக ஃபீல்டிங் நின்றதை அடுத்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் எடுத்தது சிஎஸ்கே அணி.
11-வது ஓவரின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 86 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. அதை அடுத்து அந்த அணியால் அந்த சரிவிலிருந்து மீள முடியவில்லை. அதன் பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 18.3 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் இதுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாபெரும் வெற்றியாகவும் அமைந்தது.