CSK: “யார் போனா என்ன.. சிஎஸ்கே-வுக்காக நான் நிப்பேன்”.. கெத்து காட்டி நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ்!
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் அபார பந்துவீச்சில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே எடுத்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பிய நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒற்றை ஆளாக நின்று ஆடிய ஆட்டம் சிஎஸ்கே அணியின் மானத்தை காப்பாற்றியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், உர்வில் பட்டேல் 4 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் ரன் ஏதுமின்றியும், டெவால்ட் ப்ரீவிஸ் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து நடையை கட்டினர். இதனால் 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தவித்தது. ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்ற கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த 7 போட்டிகளில் மோசமாக ஆடி வந்த ருதுராஜ் இந்தப் போட்டியில் கடினமான சூழலில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.
ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் துளியும் பதற்றமடையாத அவர், நெருக்கடியான கட்டத்தில் நிதானமும் அதிரடியும் கலந்த ஒரு கேப்டனுக்கு உரிய இன்னிங்ஸை ஆடினார். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை விரட்டிய அவர் 60 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். ருதுராஜ் தனது பொறுப்பான பேட்டிங் மூலம் ஒவ்வொரு வீரருடனும் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்களை அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.
சிவம் துபேவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 43 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே 22 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கார்த்திக் சர்மாவுடன் 14 பந்துகளில் 26 ரன்களும், அதிரடி காட்டிய ஜேமி ஓவர்டன் உடன் வெறும் 7 பந்துகளில் 21 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஓவர்டன் 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சு கூட்டணியும் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. ககிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் ஜோடி பவர்பிளே ஓவர்களில் சிஎஸ்கே அணியை மூச்சு விட முடியாமல் திணறடித்தது. இவர்களது துல்லியமான பந்துவீச்சால் முதல் 6 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரபாடா 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சிராஜ் 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இவர்களுக்கு துணையாக அர்ஷத் கான் 2 விக்கெட்டுகளையும், மானவ் சுதார் 1 விக்கெட்டையும் வீழ்த்தி மிடில் ஆர்டரை சரித்தனர். தற்போது 159 ரன்கள் என்ற இலக்கை குஜராத் அணி துரத்த உள்ளது.


Click it and Unblock the Notifications