CSK vs GT: சிஎஸ்கே-வை வீழ்த்திய மண்ணின் மைந்தன்.. சாய் சுதர்சன் ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே நிர்ணயித்த 159 ரன்கள் என்ற இலக்கை, குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஆடி வரும் தமிழக வீரர் சாய் சுதர்சன் தனது இமாலய சிக்சர்களால் சுக்குநூறாக்கினார். மண்ணின் மைந்தனான சாய் சுதர்ஷன் சிஎஸ்கே அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தினார். சிஎஸ்கே அணி அடைந்துள்ள இந்த படுதோல்வி, பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்துமா என ரசிகர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு தொடக்கமே பேரதிர்ச்சியாக அமைந்தது. சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும், உர்வில் பட்டேல் 4 ரன்களிலும், சர்ஃபராஸ் கான் ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தத்தளித்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தாலும், மறுபுறம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒற்றை ஆளாக நின்று போராடினார்.

முதலில் நிறைய பந்துகளை வீணடித்தாலும் ருதுராஜ் 60 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். சிவம் துபே 22 ரன்களும், ஜேமி ஓவர்டன் 18 ரன்களும் எடுத்தனர். முடிவில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. குஜராத் தரப்பில் ககிசோ ரபாடா 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை நோக்கி குஜராத் அணி களமிறங்கியது. கேப்டன் சுப்மன் கில் 23 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் களமிறங்கிய சாய் சுதர்சன், சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை ஈவு இரக்கமின்றி விளாசித் தள்ளினார். சேப்பாக்கம் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர், வெறும் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 மெகா சிக்சர்களுடன் 87 ரன்களை குவித்து ருத்ரதாண்டவம் ஆடினார்.
சாய் சுதர்சனுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்து வெற்றியை உறுதி செய்தது. சாய் சுதர்சன் வெற்றிக்கு சற்று முன்பு ஆட்டமிழந்தாலும், குஜராத் அணி 16.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 162 ரன்கள் எடுத்து மிக எளிதாக வெற்றியை ருசித்தது. சிஎஸ்கே தரப்பில் அகீல் ஹொசைன் மற்றும் நூர் அகமது தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். உள்ளூர் மைதானத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே சிஎஸ்கே அணி மோசமாக சொதப்பியது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
