அகமதாபாத் : ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்றும் மழையே விளையாடி ஆட்ட நாயகன் விருது பெரும் என்று பல்வேறு நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் போல் தற்போது வெயில் வெளுத்து வாங்குவதாகவும், மாலை நேரத்தில் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று போல் மழை குறுக்கிட்டால் ஆட்டம் கண்டிப்பாக ஓவர்கள் குறைக்கப்படும். அப்படி நடந்தால் எந்த அணிக்கு சாதகமான சூழல் நிலவும் என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே மற்றும் குஜராத் என இரண்டு அணியிலுமே பலம் வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். எனவே மழை பெய்தால் இவ்விரு அணியில் உள்ள சுழற் பங்குவீச்சாளர்களுக்கும் கடினமான சூழலே நிலவும்.
அதுவும் முதலில் பந்து வீசும் அணியில் சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல் பட முடியாது. இதே போல் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக வேகப்பந்துவீச்சை சார்ந்தவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அப்படி பார்த்தால் அகமதாபாத்தில் முஹமது ஷமி இந்த சீசனில் மட்டும் 17 விக்கெட் எடுத்து இருக்கிறார்.இதனால் அவருக்கு சாதகமான சூழல் நிலவும்.
இதேபோன்று சிஎஸ்கே அணியிலும் தீபக்சாஹர் பந்தை நன்றாக ஸ்விங் செய்வார் என்பதால் அவரையும் நாம் குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்டம் 20 ஓவராக நடந்தால் சுப்மன் கில், சாகா, ஹர்திக் பாண்டியா, ராகுல் திவாட்டியா போன்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிப்பார்கள். இது குஜராத் அணிக்கு சாதகமாக அமையும். இதுவே ஓவர்கள் குறைக்கப்பட்டால் சிஎஸ்கே அணியின் கையே ஓங்கும்.
ஏனென்றால் சிஎஸ்கேவில் அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும் ஆட்டம் வேகமாக நகரும் போது சி எஸ் கே அணி குஜராத்தை விட சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குஜராத் அணியில் நிலைத்து நின்று ஆடி அதிரடியாக ஆடுபவர்கள் தான் இருக்கிறார்கள். மேலும் பதிராணா போன்ற யாக்கர் பந்துகளை வீசும் வீரர் சிஎஸ்கேவில் இருப்பதால் அது சென்னைக்கு தான் சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.