சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாய் காயம் காரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரசிகர்களிடையே சிஎஸ்கே டிக்கெட் விற்பனையை அதிகரிப்பதற்காக கிளப்பப்பட்ட வதந்தியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து முழுமையான தகவல்களை பார்க்கலாம்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 5 போட்டிகளில் 1 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். இதனிடையே டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகி இருப்பதாக தகவல் வெளியாகியது.

ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக களமிறங்கினார். இதனால் டிக்கெட் விற்பனையை அதிகரிப்பதற்காக சில நபர்களால் வதந்தி கிளப்பப்பட்டதாக பேசப்பட்டது. இந்த நிலையில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக 2 அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பேசுகையில், கவுகாத்தியில் நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் அடிப்பட்டது. அந்த காயத்துடனே கடந்த 2 போட்டிகளிலும் விளையாடி இருந்தார். இந்த நிலையில் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கையில் அடைந்துள்ள காயம் மிகப்பெரிய ஒன்று என்பது தெரிய வந்தது. அவரின் காயம் எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. காயத்துடன் கடந்த 2 போட்டிகளில் ஆடியதற்காக பாராட்டுகிறேன். ஆனால் இந்த சீசனில் இஃப்ருந்து அவர் விலகிவிட்டார். அவரது இடத்தில் தோனி சிஎஸ்கே அணியைவழிநடத்தவுள்ளார்.
மீண்டும் கேப்டன்சி செய்வதில் தோனிக்கு எந்த தயக்கமும் இல்லை. சிஎஸ்கே அணியில் சில சிறந்த வீரர்கள் உள்ளனர். அதேபோல் மாற்று வீரர்களையும் தேடவுள்ளோம் என்று தெரிவித்தார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து ருதுராஜ் கெய்க்வாட்-ன் முழங்கையை தாக்கியது.
இதனால் நாளைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியில் ஃபார்மில் இருந்த ஒரே பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் மட்டும்தான். அவரது இடத்தில் எந்த வீரரை கொண்டு சிஎஸ்கே அணி நிரப்பும், அப்படி நிரம்பினாலும் அவர்களால் ருதுராஜ்-க்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.