CSK vs KKR: ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த 3 முக்கிய தருணங்கள்.. சர்பராஸ் கேட்ச் முதல் கார்த்தி தியாகி வரை
முமபை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு தொடர் வெற்றிகளுடன் ஐபிஎல் 2026 வெற்றிப்பாதைக்கு திரும்பியது. சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த CSK, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
முந்தைய போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 48 ரன்கள் சேர்க்க, டேவால்ட் பிரெவிஸ் 29 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். கொல்கத்தா சார்பில் பந்துவீச்சில் ஜொலித்த சுனில் நரேன், நான்கு ஓவர்களில் வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பதிலுக்கு பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங் சொதப்பியது. ரமன்தீப் சிங் 23 பந்துகளில் 35 ரன்கள் மற்றும் ரோவ்மன் பவல் 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் ஆகியோரின் கடைசி நேர அதிரடியால் ஒரு ஸ்கோரை எட்ட முடிந்தது.
நூர் அஹ்மத் பந்துவீச்சில், நான்கு ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் கொடுத்து மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐந்து போட்டிகளில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு முன்னேறியது. தொடர் தோல்விகளால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐந்து ஆட்டங்களில் ஒரு புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் நீடிக்கிறது. இப்போட்டியில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த மூன்று முக்கிய தருணங்களை தற்போது பார்க்கலாம்.
சர்பராஸ் கானின் அபார கேட்ச்:
சர்பராஸ் கான், தனது அற்புதமான கேட்சிங் திறனால் மீண்டும் ஃபில்டிங் தன்னை நிரூபித்தார். கொல்கத்தா இன்னிங்ஸின் கடைசி ஓவரில், அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ரமன்தீப் சிங் 'ரிவர்ஸ் லேப்' ஷாட் ஆட முயன்றார். பந்து சரியாகக் கனெக்ட் ஆகாமல், நேராக ஷார்ட் தேர்ட் மேனில் சர்பராஸ் கான் கையில் சென்றது.பந்து அவரிடம் பிடிப்படுமா என சந்தேகம் எழுந்தாலும், அதைச் சாகசமாகப் பிடித்த சர்பராஸ், ரசிகர்களிடம் அதை காட்டி கொண்டாடினார்.
நூர் அஹ்மத்தின் அபார பவுலிங்:
சீசனின் முதல் நான்கு போட்டிகளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியிருந்த நூர் அஹ்மத், இந்த ஆட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.அவர் தனது முதல் விக்கெட்டை 11வது ஓவரில் வீழ்த்தினார். அப்போது, 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தா கேப்டன் அஜிங்க்யா ரஹானே, இன்சைட்-அவுட் ஷாட் ஆட முயன்று, எக்ஸ்ட்ரா-கவரில் நின்ற ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச்-அவுட் ஆனார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான நூர் அஹ்மத், அடுத்த பந்திலேயே மற்றொரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஒரு மின்னல் வேக பந்துவீச்சால், கேமரூன் கிரீனை 'கோல்டன் டக்' அவுட் ஆக்கி ஸ்டம்புகளைச் சிதறடித்தார்.
கார்த்திக் தியாகியின் அபார வேகம்:
கார்த்திக் தியாகி இப்போட்டியில் அபார வேகத்தில் பந்துவீசினார். 12வது ஓவரில் 148.1 கி.மீ வேகத்தில் வீசிய ஒரு பந்து, நன்றாக நிலைத்து ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சனை வீழ்த்தியது.தியாகி அந்த ஓவரை ஒரு ஸ்லோவர் பந்துடன் தொடங்கினார். சஞ்சு அந்த மாறுபாட்டைக் கணித்து, பந்தை லாங்-ஆஃப் எல்லைக்கு மேல் சிக்ஸருக்கு அனுப்பினார்.
ஆனால், இந்த மோதலில் தியாகியே வென்றார். சஞ்சு, மற்றொரு அதிரடி ஷாட்டுக்கு முயலும்போது, கூடுதல் வேகத்தால் ஏமாற்றப்பட்டு, பந்து ஸ்டம்புகளைத் தகர்த்து ஆட்டமிழந்தார். அதுமட்டும் இல்லாமல் டெத் ஓவர்களில் தொடர்ந்து அதிவேக யாக்கர்களை வீசி சிஎஸ்கே பேட்டர்களை நெருக்கடியில் ஆழ்த்தினார். கார்த்திக் தியாகி தொடர்ந்து இவ்வாறு பந்துவீசினால், இந்திய அணியிலும் அவரால் விளையாடக் கூடும்.


Click it and Unblock the Notifications