CSK vs KKR: "பவர்பிளேவில் நடந்த அந்த விஷயம் தான் தோல்விக்கு காரணம்".. தோற்ற பின் ரகானே வேதனை
சென்னை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, தங்களது தோல்விக்கான காரணங்கள் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரகானே விரிவாகப் பேசினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணியின் பவர்பிளே அதிரடி மிரள வைத்தது. குறிப்பாக இளம் வீரர் ஆயுஷ் மத்ரே 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். சஞ்சு சாம்சன் 48 ரன்களும், டிவால்ட் பிரெவிஸ் 41 ரன்களும் சேர்த்தனர்.

தொடர்ந்து 193 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. தோல்விக்கு பிறகு பேசிய கேப்டன் ரகானே கூறியதாவது:
"பேட்டிங்கில் எங்களுக்கு சரியான வேகம் கிடைக்கவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டோம் என்று கருதுகிறேன். சிஎஸ்கே அணி பவர்பிளே ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் குவித்த போதிலும், அவர்களை 192 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்கள் பந்துவீச்சாளர்களின் சிறந்த உழைப்பு.
ஆனால் பேட்டிங்கில் பவர்பிளே ஓவர்களில் நாங்கள் வெறும் 36 அல்லது 37 ரன்கள் மட்டுமே எடுத்தோம். அங்கேயே நாங்கள் பின்னடைவைச் சந்தித்தோம். இந்தப் போட்டியில் அதுதான் மிகவும் முக்கியமானது. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு ரன் குவிப்பது சவாலாக இருந்தது. ஒரு பேட்டர் ஆட்டத்தின் இறுதிவரை நின்று விளையாடி இருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும்.
தொடர்ந்து போட்டிகளில் தோற்பது கடினமாக இருக்கிறது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் நேர்மறையான எண்ணத்துடன் இருக்க வேண்டியது அவசியம். இனி வரும் போட்டிகளில் அணியின் காம்பினேஷன் குறித்து ஆலோசித்து மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முடிவுகள் நமக்கு சாதகமாக வராத போது மாற்றங்கள் குறித்து சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.
எங்கள் அணியின் கார்த்திக் தியாகி சிறப்பாக பந்துவீசினார். அவர் வலைப்பயிற்சியில் கடினமாக உழைக்கிறார். அவரது வேகம் அபாரமாக உள்ளது. போட்டிக்கு போட்டி அவர் முன்னேறி வருகிறார். அதேபோல் இரண்டு அணிகளின் ஸ்பின்னர்களும் சிறப்பாக செயல்பட்டனர். பேட்டர்களுக்கு பெரிய ஷாட்கள் ஆடுவது எளிதாக இருக்கவில்லை. தோல்வியில் இருந்து மீண்டு வர எங்களை நாங்களே நம்ப வேண்டும்" என ரகானே தெரிவித்தார். கொல்கத்தா தரப்பில் ரமன்தீப் சிங் 35 ரன்களும், ரோவ்மன் பவல் 31 ரன்களும் எடுத்தனர். சிஎஸ்கே தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் வெற்றியைத் தடுத்தார்.


Click it and Unblock the Notifications