CSK vs KKR: சிஎஸ்கே-வுக்கு எதிராக தமிழக வீரரை இறக்கிய கொல்கத்தா.. பிளேயிங் 11, இம்பாக்ட் சப் விவரம்
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை மண்ணில் தமிழக வீரரை களமிறக்கி உள்ளது. கடந்த இரண்டு போட்டிகளில் ஆடாத அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட உள்ளார்.
2026 ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்கியா ரகானே, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் நிகழ்வின் போது மைதானமே அதிரும் வகையில் சிஎஸ்கே ரசிகர்கள் தங்களது அணிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். டாஸ் நிகழ்வில் நாணயத்தை சுண்டிய சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முன்னிலையில், ரகானே 'டெய்ல்ஸ்' என கேட்க, அதிர்ஷ்டம் அவர் பக்கம் சாய்ந்தது. டாஸ் வென்ற பின் பேசிய ரகானே, "கடந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக முடிவு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்பினும் வீரர்களிடம் நேர்மறையான எண்ணம் உள்ளது. முதலில் பந்துவீசி சென்னையை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பின்னர் அந்த இலக்கை எளிதாக துரத்தி வெற்றி பெறுவோம் என நம்புகிறோம்" என்றார்.
கொல்கத்தா அணியில் ஒரே ஒரு மாற்றமாக நவ்தீப் சைனிக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த இரு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார்.
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறுகையில், "நானும் முதலில் பந்துவீசவே விரும்பினேன். இருப்பினும், முதலில் பேட்டிங் செய்து ஒரு கடினமான இலக்கை நிர்ணயிப்பது சவாலாக இருக்கும். கடந்த போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அணியின் சமநிலை தற்போது சரியாக அமைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அதே வீரர்களுடன் களம் காண்கிறோம்" என தெரிவித்தார்.
மைதானத்தின் தன்மை குறித்து பார்க்கையில், இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானம் வழக்கமான சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான போக்கை மாற்றி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு அளிக்கிறது. மைதானத்தின் நேர் எல்லை 79 மீட்டர் நீளமாகவும், ஒரு பக்க எல்லை 63 மீட்டர் மற்றும் மற்றொரு பக்கம் 70 மீட்டராகவும் உள்ளது. பந்து நன்கு எழும்பி வரும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது விவேகமான பந்துவீச்சை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த முறை அதிக வேலை இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி விவரம்:
சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, சர்பராஸ் கான், ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங்.
சிஎஸ்கே அணியின் இம்பாக்ட் வீரர்கள்: மேத்யூ ஷார்ட், அகீல் ஹொசைன், கார்த்திக் ஷர்மா, பிரஷாந்த் வீர், மேட் ஹென்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:
அஜிங்கியா ரகானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன், ரிங்கு சிங், ரோவ்மன் பவல், ரமன்தீப் சிங், சுனில் நரைன், அனுகுல் ராய், வருண் சக்கரவர்த்தி, கார்த்திக் தியாகி, வைபவ் அரோரா.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இம்பாக்ட் வீரர்கள் - ஃபின் ஆலன், மனிஷ் பாண்டே, தேஜஸ்வி தஹியா, டிம் சீஃபர்ட், நவ்தீப் சைனி


Click it and Unblock the Notifications