CSK vs LSG: லக்னோ அணியை பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றிய சிஎஸ்கே.. 204 ரன் சேசிங்
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேற்றியது.

2026 ஐபிஎல் தொடரின் 53வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு ஜோஷ் இங்கிலிஸ் மிரட்டலான தொடக்கத்தை கொடுத்தார். அவர் வெறும் 33 பந்துகளில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 85 ரன்கள் குவித்தார். இறுதியில் ஷாபாஸ் அகமது 43 ரன்கள் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. சென்னை தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
204 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடி களம் அமைத்துக் கொடுத்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு வந்த இளம் வீரர் ஊர்வில் படேல் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். லக்னோ பந்துவீச்சாளர்களை துளியும் மதிக்காமல் பந்தை மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களாக பறக்கவிட்டார்.
வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்த ஊர்வில் பட்டேல், ஒட்டுமொத்தமாக 23 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 282 ஆக இருந்தது. பவர் பிளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஒருபுறம் 42 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாட, இறுதியில் சிவம் துபே மற்றும் பிரசாந்த் வீர் தலா 2 சிக்சர்களை பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் பந்துவீச்சு இந்த போட்டியில் மிகவும் பரிதாபமாக இருந்தது. முகமது ஷமி 37 ரன்களும், ஆவேஷ் கான் 44 ரன்களும் வாரி வழங்கினர். திக்வேஷ் ரதி மற்றும் ஷாபாஸ் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், ரன் வேகத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த இமாலய வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் தனது இடத்தை வலுப்படுத்தியுள்ளது. அதேசமயம், லக்னோ அணியின் பிளே ஆப் கனவு இந்த தோல்வியின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
