Dhoni: எந்த வீரரும் செய்யாத மாபெரும் ஐபிஎல் சாதனையை செய்த தோனி.. அதிக வயதில் ஆட்டநாயகன் விருது
லக்னோ: ஐபிஎல் வரலாற்றில் 43 வயதில் தோனி மாபெரும் சாதனை ஒன்றை செய்திருக்கிறார். நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்திருந்தார். நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடித்திருந்தார்.
அவரது ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. சிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்தாலும், அதிரடியாக விளையாடிய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற மாபெரும் சாதனையை தோனி செய்திருக்கிறார்.

மேலும் இது அவருக்கு 18வது ஆட்டநாயகன் விருது ஆகும். அவரது முதல் ஆட்டநாயகன் விருது 2008 ஆம் ஆண்டு கிடைத்தது. தற்போது பதினெட்டாவது ஆட்டநாயகன் விருதை 2025 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி ஐபிஎல் தொடரில் ஆட்டநாயகன் விருது ஒன்றை வென்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் தற்போது தோனி இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். விராட் கோலியுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் ரோகித் சர்மா 19 ஆட்டநாயகன் விருதுகளுடன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் விராட் கோலி மற்றும் தோனி 18 ஆட்டநாயகன் விருதுகளுடன் உள்ளனர். மூன்றாவது இடத்தில் யூசுப் பதான் 16 ஆட்டநாயகன் விருதுகளுடன் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜாவும் மூன்றாவது இடத்தில் 16 ஆட்டநாயகன் விருதுகளுடன் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications