மும்பை: ஐபிஎல் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எங்களுக்கு எதிராக அமைந்தால் கூட, உடனடியாக இளம் வீரர்களை தயார் செய்வோம் என்று தெரிவித்துள்ளார். அதனை மனதில் வைத்தே சில வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறிய ஃபிளெமிங், ஆயுஷ் மாத்ரே அனைவரையும் ஈர்த்துவிட்டதாக பாராட்டி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடக்கும் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடுகிறது. எல்கிளாசிக்கோ போட்டி என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2023ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய அத்தனை போட்டிகளிலும் சிஎஸ்கே அணி வென்றுள்ளது.

இந்த சீசனில் மும்பை அணி ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் ஃபார்ம் ரசிகர்களிடையே கவலையடைய வைத்துள்ளது. இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் பேசுகையில், சிஎஸ்கே அணி 7ல் விளையாடி 2 வெற்றி, 5 தோல்வியுடன் இருக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் கடினமான சூழல்தான். ஆனாலும் ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் இன்னும் இருக்கிறோம். இன்னும் சில வீரர்களுக்கு கூடுதல் வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். அவர்கள் ஃபார்முக்கு வர வேண்டும். அதே நேரத்தில் போட்டியிலும் சிஎஸ்கே அணி வெல்ல வேண்டும்.
தற்போது சிஎஸ்கே அணி இருக்கும் இடத்தை பார்த்தால், பொறுமையாக இருப்பதற்கு நேரம் கிடையாது. அதேபோல் சிஎஸ்கே பிளேயிங் லெவனை மொத்தமாக மாற்றவும் விரும்பவில்லை. இன்னும் அந்த மேஜிக் ஃபார்முலாவை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறோம். சிஎஸ்கே அணியின் முழு கவனமும் இந்த சீசனில் மட்டுமே இருக்கிறது என்று சொல்ல முடியாது.
எதிர்காலத்தை பற்றியும் சிந்திக்க தொடங்கியுள்ளோம். அதற்கேற்றபடி வீரர்களை தயார் செய்து வருகிறோம். ஒருவேளை அடுத்த 2 போட்டிகளும் எங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகள் வரவில்லை என்றால், நிச்சயம் கூடுதலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ராமகிருஷ்ணா கோஷ் சிறந்த ஆல்ரவுண்டராக வருவார். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார். அவரின் ட்ரெயல்ஸில் அனைவரையும் ஈர்த்துவிட்டார். ஆனால் அனுபவத்தில் மிகவும் இளம் வீரராக இருக்கிறார். அதேபோல் ஷேக் ரஷீத் எங்களுடன் தொடர்ந்து பயணிப்பார். அனைவருமே சிறந்த வீரர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.