மும்பை: சிஎஸ்கே அணிக்காக 17 வயதில் அறிமுகமாகிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆயுஷ் மாத்ரே. 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே நேரடியாக சிஎஸ்கே அணியில் வாய்ப்பு பெற்றிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் ஆயுஷ் மாத்ரேவை யார்ரா இந்த பையன் என்று ரசிகர்கள் பலரும் திரும்பி பார்த்து வருகின்றனர். இதில் ஆயுஷ் மாத்ரே யார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி தரப்பில் கரண் சர்மா மாற்றப்பட்டு அஸ்வனி குமார் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணி தரப்பில் ராகுல் திரிப்பாட்டி நீக்கப்பட்டு அவரது இடத்தில் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணி லக்னோவில் விளையாடிய போதுதான் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு மாற்று வீரராக ஆயுஷ் மாத்ரே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் மும்பை வந்த சிஎஸ்கே அணியுடன் 17 வயதாகும் ஆயுஷ் மாத்ரே இணைந்து கொண்டார். சிஎஸ்கே அணியுடன் இணைந்த 3 நாட்களிலேயே ஆயுஷ் மாத்ரே விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் 2 ட்ரையல்ஸிலும் நிர்வாகிகள் அனைவரையும் ஈர்த்திருந்தார் ஆயுஷ் மாத்ரே. இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்காக 17 வயதில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ஆயுஷ் மாத்ரே படைத்துள்ளார். 17 வயதிலேயே சிஎஸ்கே அணியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.
ஏனென்றால் சிஎஸ்கே அணியில் அண்மைக் காலங்களில் 30 வயதிற்கு மேலான வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் ஆயுஷ் மாத்ரேவிற்கு டி20 அனுபவமே கிடையாது. இதுவரை 9 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள ஆயுஷ் மாத்ரே, 504 ரன்களை விளாசி இருக்கிறார். மும்பை அணிக்காக ரஞ்சியில் விளையாடியுள்ள அவர் 2 சதங்களையும் விளாசி இருக்கிறார்.
2007ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆயுஷ் மாத்ரே, 6 வயதிலேயே கிரிக்கெட் விளையாட தொடங்கி இருக்கிறார். அதன்பின் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்த நிலையில், 15 வயதிலேயே மும்பையின் கிரிக்கெட் வட்டாரத்தில் அதிகளவில் பேசப்பட்டுள்ளார். இதன்பின் முழு நேர கிரிக்கெட் வீரராக முடிவெடுத்த அவருக்கு, குடும்பத்தினரின் ஆதரவும் இருந்துள்ளது.
இந்த நிலையில் 17 வயதிலேயே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி இருக்கிறார். அதிலும் சொந்த மண்ணில் ஆயுஷ் மாத்ரே அறிமுகமாகி இருப்பது அவரது குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிரடிக்கு பெயர்போன ஆயுஷ் மாத்ரே, சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டரில் எப்படி விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.