சண்டிகர்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு சிஎஸ்கே அணியின் ஃபீல்டிங்கை விடவும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் எடுத்த சில மோசமான முடிவுகளே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக பவுலிங் மாற்றங்களில் செய்த தவறுகள், சென்னை அணியின் தோல்வியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே அணி 6ல் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 9வது இடத்திலேயே இருந்து வருகிறது.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், அடுத்து வரும் 9 போட்டிகளில் சிஎஸ்கே அணி 7ல் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் பஞ்சாப் அணியுடனான தோல்வி சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, சிஎஸ்கே அணி செய்த தவறால் அந்த அணி 219 ரன்களை குவித்துவிட்டது.
சிஎஸ்கே அணி வீரர்கள் ஃபீல்டிங்கில் ஒரு புறம் தவறு செய்தாலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ன் மோசமான முடிவுகளே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பஞ்சாப் அணியின் மற்ற வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறிய போது, பிரியன்ஷ் ஆர்யா மட்டும் களத்தில் தனியாக அதிரடி காட்டி கொண்டிருந்தார். அப்போது பவர் பிளேவின் கடைசி ஓவரை அஸ்வினிடம் கொடுத்தது மிகப்பெரிய தவறாகும்.
கடந்த 4 போட்டிகளாகவே அஸ்வின் பவர் பிளேவில் மோசமாக பவுலிங் செய்து வருகிறார். இதனால் அந்த ஓவரில் பஞ்சாப் அணி 21 ரன்களை விளாசி தள்ளியது. அந்த ஓவரில் பதிரானாவை கொண்டு வந்து கட்டுப்படுத்தி இருந்தால், சிஎஸ்கே அணியால் நிச்சயமான ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இருக்க முடியும். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் பதிரானாவை 2ஆம் பாதியில் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
பவர் பிளேவில் ஒரு ஓவரை பதிரானாவுக்கு கொடுத்து சிஎஸ்கே அணி முயற்சிக்க வேண்டும். அதேபோல் நூர் அஹ்மத் நேற்றைய ஆட்டத்தில் தாமதமாகவே அட்டாக்கில் வந்தார். ஒரு கட்டத்தில் பதிரானா மற்றும் நூர் அஹ்மத் இருவரும் மாற்றி மாற்றி பவுலிங் செய்த போது, பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்களுக்கு சிஎஸ்கே அணியின் திட்டம் எளிதாக தெரிய வந்தது.
அதேபோல் கடைசி நேரத்தில் பதிரானாவை அட்டாக் செய்கிறார்கள் என்பது புரிந்தும், அவருக்கான மாற்று திட்டத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அளிக்கவில்லை. இன்னொரு பக்கம் ஜடேஜா சிறப்பாக பவுலிங் செய்த போதும், அவருக்கான 4 ஓவர்களை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் பவுலிங் மாற்றங்களை பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றபடி செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணி வெல்ல முடியும்.
எப்படியென்றால் சிவம் துபே களத்தில் இருக்கும் வரை சாஹலை பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அட்டாக்கில் கொண்டு வரவில்லை. சாஹல் பந்தில் சிவம் துபே 2 சிக்சரை விளாசி இருந்தால் கூட, ஆட்டம் மொத்தமாக மாறி இருக்கும். ஆனால் அந்த இடத்தில் ஃபெர்குசன் போன்ற கூடுதல் வேகத்தில் வீசக் கூடிய பவுலரை ஸ்ரேயாஸ் ஐயர் அட்டாக்கில் வைத்திருந்தார். இதனை தான் ருதுராஜ் கெய்க்வாட் செய்ய வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.