சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் செய்த சொதப்பலான ஃபீல்டிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் செய்த பவுலிங் மாற்றங்களே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது. இதனால் சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் 6ல் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 220 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல், சிஎஸ்கே அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்திருக்கிறது. ஆனாலும் கடந்த போட்டிகளை விடவும் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆட்டம் மெருகேறி இருக்கிறது.

டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே மற்றும் தோனி ஆகியோரின் பேட்டிங் உச்சத்திற்கு வந்துள்ளது. எப்படியும் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்துவிடுவார் என்பதால், சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் ஒரேயொரு அதிரடி வீரர் மட்டுமே தேவையாக இருக்கிறார். அந்த இடத்தில் தற்போது விஜய் சங்கர் விளையாடி வருகிறார்.
அவரது இடத்தில் இளம் வீரரான வன்ஷ் பேடியை சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இவரை சிஎஸ்கே அணி மெகா ஏலத்தில் ரூ.55 லட்சத்திற்கு வாங்கியது. டெல்லி பிரீமியர் லீக் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையின் கீழ் விளையாடியவர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், தாராளமான ஓவருக்கு 15 முதல் 20 ரன்களை விளாசக் கூடிய வீரர்.
குறிப்பாக ஸ்பின்னர்களை அட்டாக் செய்து ஆடக் கூடியவர். டிபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடி 221 ரன்களை குவித்திருக்கிறார். இதனால் விஜய் சங்கருக்கு பதிலாக வன்ஷ் பேடியை களமிறக்கினால், சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி வலிமையான கேகேஆர் அணியை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.
எப்படியும் தோனியால் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோரை அட்டாக் செய்ய முடியாது. இதனால் சிவம் துபேவை மட்டுமே நம்பி செல்வதற்கு பதிலாக, ,கூடுதலாக வன்ஷ் பேடியையும் களமிறக்கி முயற்சித்து பார்க்கலாம். ஒருவேளை சிஎஸ்கே அணி மாற்றம் செய்யவில்லை என்றால், 5வது தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்று பார்க்கப்படுகிறது.