சென்னை: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி சாரை பார்த்து சில வார்த்தைகளாவது பேச வேண்டும் என்று பஞ்சாப் அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரியன்ஷ் ஆர்யாவின் கனவு நிறைவேறுமா என்ற ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாட உள்ளது. கடந்த 2 சீசன்களாகவே பஞ்சாப் அணி சேப்பாக்கம் மண்ணில் சிஎஸ்கே அணியை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த ஆதிக்கத்தை சிஎஸ்கே அணி முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே இந்த சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் பஞ்சாப் அணியின் இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா 39 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார்.
டெல்லியைச் சேர்ந்த இளம் வீரரான பிரியன்ஷ் ஆர்யா, அந்த இன்னிங்ஸ் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார். இந்த சீசனில் மட்டும் பிரியன்ஷ் ஆர்யா 323 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் விரைவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா வரிசையில் இந்திய அணிக்காக மற்றொரு இடதுகை பேட்ஸ்மேனாக அறிமுகமாகுவார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியையொட்டி பிரியன்ஷ் ஆர்யா அளித்துள்ள பேட்டி சிஎஸ்கே ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அதில் பிரியன்ஷ் ஆர்யா பேசுகையில், முல்லன்பூரில் நடந்த போட்டியின் போது தோனி சாருடன் பேச விரும்பினேன். ஆனால் நான் வருவதற்குள் அவர் மைதானத்தில் இருந்து வெளியில் சென்றுவிட்டார் என்று சோகத்துடன் கூறினார்.
அதேபோல் பஞ்சாப் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தோனியை சந்திக்கும் சாஹல், அவரிடம் இருந்து பேட் ஒன்றை அன்பளிப்பாக பெற்று திரும்பினார். அதேபோல் நேராக பிரியன்ஷ் ஆர்யாவை சந்திக்கும் சாஹல், தோனி பாயிடம் இருந்து பேட்டை பெற்றுவிட்டேன் என்று பிரியன்ஷ் ஆர்யாவை வம்புக்கு இழுக்கிறார். இதனால் சேப்பாக்கத்தில் தோனியை பிரியன்ஷ் ஆர்யா சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.