CSK vs PBKS: சிஎஸ்கே-வை வீழ்த்திய உடன் பஞ்சாப் கிங்ஸ் வீரர்களுக்கு கடும் அபராதம் விதித்த பிசிசிஐ
சென்னை: 2026 ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு மத்தியில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பிசிசிஐ மிகப்பெரிய அபராதத்தை விதித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதே இந்த அபராதத்திற்கு முக்கிய காரணமாகும். டி20 கிரிக்கெட் விதிமுறைகளின்படி, பந்துவீசும் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களது 20 ஓவர்களையும் வீசி முடிக்க வேண்டும். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி பந்துவீசி முடிக்க கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால், 'ஸ்லோ ஓவர் ரேட்' விதிமுறையை மீறியதாக போட்டி நடுவர்கள் அறிக்கை அளித்தனர்.

ஐபிஎல் நடப்பு சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தவறை செய்வது இது 2வது முறையாகும். அதாவது பஞ்சாப் கிங்ஸ் அணி தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளிலும் ஸ்லோ ஓவர் ரேட் குற்றத்தை செய்துள்ளது. எனவே, ஐபிஎல் நடத்தை விதி 2.22-ன் கீழ் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல் முறை தவறு செய்தால் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும், ஆனால் இது 2வது முறை என்பதால் அபராத தொகை 24 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கேப்டனை தவிர்த்து ஆடும் லெவனில் இடம்பெற்றிருந்த மற்ற அனைத்து வீரர்களுக்கும் மற்றும் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வீரருக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. அதன்படி மற்ற வீரர்களுக்கு 6 லட்சம் ரூபாய் அல்லது அவர்களின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம், இதில் எந்த தொகை குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், இன்னிங்ஸின் கடைசி 2 ஓவர்களில் உள்வட்டத்திற்குள் கூடுதலாக ஒரு ஃபீல்டரை நிறுத்த வேண்டிய கட்டாயம் பஞ்சாப் அணிக்கு ஏற்பட்டது. இதனை போட்டியின் முடிவிலேயே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்திருந்தார். இனிவரும் போட்டிகளில் இந்த தவற்றை சரிசெய்ய வேண்டும் என அவர் கூறியிருந்த நிலையில், தற்போது இந்த 24 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், நடப்பு சீசனில் பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications