சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி நாளை களமிறங்க உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஆர்சிபி, கேகேஆர், ஐதராபாத், டெல்லி என்று 4 அணிகளிடமும் சிஎஸ்கே தோல்வியடைந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலாவது சிஎஸ்கே அணி வெற்றிப் பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வால் கூட்டணியின் பேட்டிங்கை பார்த்தோம்.

அந்த கூட்டணியின் பேட்டிங்கில் கொஞ்சம் கூட பயமே இல்லை. கடைசியாக ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டிங் ஆட செல்லும் போது, ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா அணியும் ஆர்வமாக பார்ப்போம். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வால் ஆகியோரின் பேட்டிங்கை ஆர்வமுடன் பார்த்தோம். கில்கிறிஸ்டை பார்க்கும் போது கிடைத்த அதே உணர்வு நேற்றும் கிடைத்தது.
கடந்த சில போட்டிகளில் கொஞ்சம் கொஞ்சமாக எங்களின் ஃபார்முக்கு வருகிறோம் என்று கருதுகிறேன். அதற்கு முன்பாக தவறு செய்துவிடுவோமோ என்ற பயத்துடன் களத்தில் வீரர்கள் இருந்தனர். அப்படி விளையாடும் போது ஒருநாளும் சிறப்பாக செயல்பட முடியாது. ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களை கண்டறிவது மட்டுமல்லாமல், அந்த வீரரை உயர் நிலையில் விளையாடுவதற்கு தயார் செய்வதும் அணி நிர்வாகத்தின் கைகளிலேயே உள்ளது.
இதற்கு ஷேக் ரஷீத் சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த 2 சீசன்களாக ஷேக் ரஷீத் சிஎஸ்கே அணியுடன் இருந்தார். சிறந்த வீரரான அவர், எப்படி அழுத்தத்தை சமாளிப்பார் என்பது கேள்வியாக இருந்தது. இப்போது வாய்ப்பு கிடைத்த பின், அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் அனைவரும் ஒரு குழுவாக அடுத்த சீசனில் முன்னேற்றம் அடைய என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து வருகிறோம்.
தொடர்ச்சியாக பயிற்சி போட்டிகளில் விளையாடொ, அழுத்தமான சூழல்களில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்கவுள்ளோம். வலைப்பயிற்சியில் வீரர்களுக்கு எந்த அழுத்தமும் இருப்பதில்லை. எந்த ஷாட்டை வேண்டுமானாலும் விளையாடலாம் ஆட்டமிழந்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் ஒரு போட்டிக்கான சூழலை உருவாக்கி, அவர்களை தயார் செய்கிரோம் என்று தெரிவித்துள்ளார்.