சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 2019ஆம் ஆண்டுக்கு பின் ஒருமுறை கூட 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்து வெல்ல முடியாமல் திணறி வருகிறது. இதற்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டிய போட்டிகளில், ருதுராஜ் இதுவரை 4 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக அடையும் 4வது தோல்வி இதுவாகும். இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், அடுத்த 9 போட்டிகளில் 7ல் வெற்றிபெற வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இந்த சீசனில் சிஎஸ்கே அணி அடைந்த 4 தோல்விகளும் சேஸிங்கில் தான் வந்துள்ளது. அதாவது 4 போட்டிகளிலும் சிஎஸ்கே அணிக்கு எதிரணிகள் எளிதாக 180 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து வென்றிருக்கிறார்கள். சேஸிங்கில் பலவீனமாக இருப்பதை அறிந்தும், சிஎஸ்கே அணி சில போட்டிகளில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து தோல்வியை சந்தித்திருக்கிறது.
2019ஆம் ஆண்டுக்கு பின் சிஎஸ்கே அணி விளையாடிய 11 போட்டிகளில் 180 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த 11 போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது. இதில் இந்த சீசனில் மட்டும் 4வது முறையாக சிஎஸ்கே அணி 180 ரன்களுக்கு மேல் நிர்ணயித்த இலக்கை சேஸ் செய்ய முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த தோல்விக்கு சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் 2020ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக ருதுராஜ் கெய்க்வாட் உருவெடுத்தார். அதன்பின் அவர் 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டிய போட்டிகளில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த 11 போட்டிகளில் 4 முறை டக் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். அதேபோல் 3 போட்டிகளில் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே அரைசதம் அடித்துள்ள ருதுராஜ் கெய்க்வாட், மற்ற 10 போட்டிகளில் மோசமான ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட் 180 ரன்களுக்கு மேலான ரன்களை சேஸிங் செய்யும் போது, அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.
180 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் ருதுராஜ் கெய்க்வாட் பெரிய ஷாட்களை விளையாட வேண்டும் என்று முயற்சித்து விக்கெட்டை பறிகொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல் சுரேஷ் ரெய்னா இல்லாமல் சிஎஸ்கே அணி ஒருமுறை கூட 180 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்தது கிடையாது. இதனால் சுரேஷ் ரெய்னாவை போன்ற ஒரு வீரரை சிஎஸ்கே அணி தேடி பிடிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் சுரேஷ் ரெய்னா சூழலுக்கு ஏற்ப அதிரடியாகவும், சில நேரங்களில் விக்கெட்டை காப்பாற்ற கட்டுப்பாடாகவும் விளையாடக் கூடியவர். சுரேஷ் ரெய்னா சென்ற பின், அந்த பணியை ராபின் உத்தப்பா, ரஹானே மற்றும் ராயுடு ஆகிய மூவரை வைத்து சிஎஸ்கே அணி ஓரளவிற்கு செய்து வந்தது. ஆனால் தற்போது சிஎஸ்கே மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இல்லாதது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
நேற்றைய ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணி சிறப்பாக விளையாடி இருந்தாலும், பவர் பிளே ஓவர்களில் ஒரு சிக்ஸ் கூட அடிக்கப்படவில்லை. அதாவது சிஎஸ்கே அணியின் முதல் சிக்சரே 9வது ஓவரில்தான் அடிக்கப்பட்டது. பவர் பிளே ஓவர்களில் கூடுதலாக 3 சிக்சரை விளாசி இருந்தாலே, சிஎஸ்கே அணியால் வெற்றி பெற்றிருக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்த சீசனில் சிஎஸ்கே அணிதான் குறைந்த அளவிலான சிக்சர்களை விளாசி இருக்கிறது. அதாவது இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் சிஎஸ்கே அணி அடித்த சிக்சர்களின் எண்ணிக்கை 23 ஆகும். ஆனால் லக்னோ அணியின் அதிரடி வீரரான நிக்கோலஸ் பூரன் மட்டும் தனியாக 24 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.
இதனால் சிவம் துபே மற்றும் தோனியை தவிர்த்து சிஎஸ்கே அணியில் அதிக சிக்சர்களை விளாசக் கூடிய பேட்ஸ்மேன்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் சிக்சர்கள் மூலமாக ரன்கள் சேர்க்க கூடிய பேட்ஸ்மேன்களே இல்லை என்று சொல்லலாம். ரச்சின், கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட மூவருமே டைமிங் மூலமாக பவுண்டரியை விளாசக் கூடிய பேட்ஸ்மேன்கள்.
இதனால் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், வாட்சன் போன்ற ஒரு அதிரடியான உடல் வலிமை கொண்ட தொடக்க வீரரை சிஎஸ்கே அணி தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பவர் பிளேவில் சிஎஸ்கே அணி எவ்வளவு அதிகமாக ரன்களை சேர்க்கிறதோ, அதே அளவிற்கு எளிதாக 200+ இலக்கினை சேஸிங் செய்ய முடியும்.
அதேபோல் கான்வே - ரச்சின் தொடக்க கூட்டணிக்கு பதிலாக, கான்வே - ருதுராஜ் கூட்டணி நேற்று களமிறங்கி இருந்தால், சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஏனென்றால் பவர் பிளேவில் டாட் பால்களை விளையாடும் பழக்கமே ருதுராஜ் கெய்க்வாட்-க்கு கிடையாது. எந்த பவுலராக இருந்தாலும், எளிதாக பவுண்டரியை விளாசி அழுத்தத்தை எதிரணிக்கு கொடுக்கும் திறமை கொண்டவர்.
ஆனாலும் நம்பர் 3ல் களமிறங்குவேன் என்பதில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பயிற்சியாளர் ஃபிளெமிங் இருவரும் தீவிரமாக இருக்கிறார்கள். அவர் நம்பர் 3ல் வருவதால், சிஎஸ்கே அணிக்கு ஏற்படும் இழப்புகளை சிஎஸ்கே அணி நிர்வாகம் பார்க்க மறுப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ரச்சின் ரவீந்திராவை பெஞ்ச் செய்துவிட்டு மிடில் ஆர்டரில் வலு சேர்க்க கூடிய ஜேமி ஓவர்டனை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் சிஎஸ்கே அணியில் இருக்கும் வீரர்களில் இமாலய சிக்சர்களை விளாசக் கூடிய பேட்ஸ்மேனாக ஜேமி ஓவர்டன் மட்டுமே இருக்கிறார். அதற்காக தான் சிஎஸ்கே அணியும் அவரை மெகா ஏலத்தில் வாங்கியது. இந்த மாற்றத்தை சிஎஸ்கே அணி அடுத்தடுத்த போட்டிகளில் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.