சண்டிகர்: சிஎஸ்கே அணியுடனான வெற்றிக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய இருவருக்கும் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் நன்றி தெரிவித்துள்ளார். ஐதராபாத் அணியில் இருந்த போது லாராவுடனான உரையாடல் தனக்கு ஊக்கமளித்ததாக கூறிய அவர், பாண்டிங் தன்மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளிப்பதாகவும் கூறி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் 6ல் பஞ்சாப் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதில் கடைசியாக வென்ற 2 போட்டிகளிலும் பஞ்சாப் அணியின் வெற்றியில் ஷஷாங்க் சிங் முக்கிய பங்கு வகித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஷஷாங்க் சிங் 36 பந்துகளில் 52 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

பஞ்சாப் அணியின் ஃபினிஷராக களமிறங்கும் அவர், அந்த மிகப்பெரிய பணிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் போட்டிக்கு பின் ஷஷாங்க் சிங் பேசுகையில், களத்தில் பேட்டிங் செய்ய இறங்கும் போது, பழைய ஆட்டங்கள் பற்றியோ அல்லது எதிர்காலத்தை பற்றியோ சிந்திக்க தேவையில்லை. பேட்டிங் என்று வந்துவிட்டால், அது பேட் மற்றும் பந்துக்கு இடையிலான ஒன்று.
என்னை பொறுத்தவரை களத்தில் நீண்ட நேரம் செலவிட்டு, பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும் என்பது மட்டும்தான். பிரையன் லாரா சார் எனது பேட்டிங் பற்றி என்னிடம் அதிகமாக உரையாடி இருக்கிறார். நான் எப்படி பேட்டிங்கை தொடங்க வேண்டும், எப்படி கட்டமைக்க வேண்டும் என்று என்னை தயார்படுத்தி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் சாதாரணமாக 6 முதல் 8 பவர் ஹிட்டர்கள் இருப்பார்கள்.
ஆனால் நான் பவர் ஹிட்டர் அல்ல.. டைமிங் மூலமாக ஷாட்களை ஆடக் கூடியவன். தற்போது எங்களின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் இருப்பதை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். ஐபிஎல் தொடருக்கு வருவதற்கு முன்பாக வலைப்பயிற்சியில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் ரிக்கி பாண்டிங் சார் என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பிரியன்ஷ் ஆர்யாவை பொறுத்தவரை அறிமுகமான முதல் போட்டியிலேயே ஒரு ட்ரெய்லரை காட்டினார். அவர் டெல்லி அணிக்காக ஆடிய போது என்ன செய்தாரோ, அதனைதான் தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக செய்து வருகிறார். நிச்சயமாக இந்திய அணிக்காக மிகப்பெரிய சாதனைகளை படைப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.