4, 4, 4, 6, 4, 4.. ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசிய சிஎஸ்கே சிங்கம் ஆயுஷ் மாத்ரே.. அரைசதம் அடித்து சாதனை
பெங்களூர்: ஆர்சிபி அணியின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் வீசிய ஒரே ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 26 ரன்களை சிஎஸ்கே அணியின் 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரே விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் 25 பந்துகளில் அரைசதம் அடித்த ஆயுஷ் மாத்ரே, சிஎஸ்கே அணிக்காக மிக இளம் வயதில் அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்களை குவித்தது. கடைசி நேரத்தில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக ஷேக் ரஷீத் - ஆயுஷ் மாத்ரே கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் இருவரும் அமைதி காத்த நிலையில், யாஷ் தயாள் வீசிய 3வது ஓவரில் ஷேக் ரஷீத் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி தள்ளினார். இதன்பின் 4வது ஓவரை வீசுவதற்காக அனுபவ வீரரான புவனேஷ்வர் குமார் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே லாங் ஆஃப் திசையில் பவுண்டரி அடிக்க, 2வது பந்தை நேராக பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து 3வது பந்தில் பவுண்டரி அடித்த ஹாட்ரிக் பவுண்டரிகளை அடிக்க, அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பி ஆச்சரியம் கொடுத்தார். இதன்பின் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் உடனடியாக ஃபீல்டிங்கில் மாற்றங்களை செய்தார்.
ஆனால் ஆயுஷ் மாத்ரே எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடிக்க, கடைசி பந்தில் பாய்ண்ட் திசையில் பவுண்டரி அடித்து அசத்தினார். இதன் மூலமாக புவனேஷ்வர் குமார் வீசிய ஒரே ஓவரில் 26 ரன்களை விளாசி ஆயுஷ் மாத்ரே ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய ஆயுஷ் மாத்ரே, ஐபிஎல் கிரிக்கெட்டில் தனது முதல் அரைசதத்தை 25 பந்துகளில் எட்டினார்.
இதன் மூலமாக சிஎஸ்கே அணிக்காக அரைசதம் அடித்த மிகவும் இளம் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் அரைசதம் விளாசிய 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதலில் வைபவ் சூர்யவன்ஷியும், 2வது இடத்தில் ரியான் பராக்கும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications