சென்னை : ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் மற்றும் ரஜத் பட்டிதர் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி சிஎஸ்கே அணியின் முஷ்டாஃபிசுர் ரஹ்மான் அசத்தியுள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ரச்சின் ரவீந்திரா, மிட்சல், முஷ்டாஃபிசுர் மற்றும் சமீர் ரிஸ்வி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்சிபி அணி தரப்பில் வழக்கம் போல் கேப்டன் டூ பிளஸிஸ் - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்த பக்கம் சிஎஸ்கே அணி தரப்பில் தீபக் சஹர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரிலேயே டூ பிளஸிஸ் பவுண்டரியை விளாச, துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார்.
இதன்பின் தீபக் சஹர் வீசிய 3வது ஓவரில் மட்டும் டூ பிளஸிஸ் 4 பவுண்டரிகளை விளாசி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் விக்கெ இழப்பின்றி 33 ரன்களாக இருந்தது. இதனால் உடனடியாக தீக்சனாவை அட்டாக்கில் கொண்டு வந்தார் ருதுராஜ். இதனால் விராட் கோலி - டூ பிளஸிஸ் இருவரும் நிதானம் காட்டினர். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, சிஎஸ்கே அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டிய தேவை அதிகரித்தது.
இதனால் பவர் பிளேவின் 5வது ஓவரை முஷ்டாஃபிசுர் ரஹ்மான் கைகளில் ருதுராஜ் கெய்க்வாட் கொடுத்தார். முதல் பந்திலேயே தனது முக்கிய ஆயுதமான கட்டரை பந்தை வீச, 2வது பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. பின்னர் 3வது பந்தில் கொஞ்சம் வேகத்தை குறைத்து ட்ரைவ் விளையாட ஏதுவாக பவுலிங் செய்ய, அந்த பந்தை பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு டூ பிளஸிஸ் வெளியில் பேட்டை விட்டார். அது சரியாக ஆஃப் சைட் திசையில் உயர பறக்க, ரச்சின் ரவீந்திராவின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.
டூ பிளஸில் 23 பந்துகளில் 8 பவுண்டரி உட்பட 35 ரன்களில் வெளியேற, பின்னர் வந்த பட்டிதர் அந்த ஓவரின் கடைசி பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை விட்டதன் விளைவாக ஆர்சிபி அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 41 ரன்கள் சேர்த்து தடுமாறியது. சரியான நேரத்தில் ஆட்டத்தை முஷ்டாஃபிசுர் ரஹ்மான் சிஎஸ்கே அணி பக்கம் ஆட்டத்தை திருப்பியது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.