இது ஐபிஎல்-ஆ? இல்லை டெஸ்ட் போட்டியா? ரொம்ப கன்பியூஸ் ஆகுதே.. ஆமை வேகத்துடன் துவங்கிய ஐபிஎல்!!
சென்னை : 2019 ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக துவக்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். தோனி தலைமையில், தொடரின் முதல் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

சுழல்
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி சென்னை அணியின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் 70 ரன்களில் சுருண்டது. இதற்கு சேப்பாக்கம் ஆடுகளம் முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அடுத்து ஆடிய சென்னை அணியும் மிகவும் நிதானமாகவே ரன் குவித்தது. இரு அணியிலும் சேர்த்து ஒரு வீரரின் ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே 100க்கும் மேல் இருந்தது.

குற்றச்சாட்டு
ஆடுகளத்தை வடிவமைத்தவர்கள் சுழலுக்கு அதிகம் ஒத்துழைக்கும் வகையில் ஆடுகளத்தை அமைத்துள்ளதாக போட்டியின் முடிவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தோனி, கோலி என இரு அணிகளின் கேப்டன்களும் இதைக் குறிப்பிட்டனர்.

ஆச்சரியம்
தோனி கூறுகையில், நாங்கள் இந்த ஆடுகளத்தில் பயிற்சிப் போட்டி நடத்தினோம். அதில் அதிக ரன்கள் குவித்தோம். பயிற்சியில் எப்போதும் 30 ரன்கள் அதிகமாக கிடைக்கும். ஆனால், இந்த ஆடுகளம் இவ்வளவு மெதுவாக இருந்ததை பார்த்து ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

பெரிய ஏமாற்றம்
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியே குறைந்த ரன்கள் எடுத்த போட்டியாக மாறி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஐபிஎல் என்றாலே பறக்கும் சிக்ஸர்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், நேற்றைய போட்டியில் மொத்தமே இரண்டு சிக்ஸர்கள் தான் அடிக்கப்பட்டது .

டெஸ்ட் போட்டி பிட்ச்
சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சிலர் "ஐபிஎல்-லுக்கு பிட்ச் ரெடி பண்ண சொன்னா டெஸ்ட் மேட்ச்சோட கடைசி நாள் பிட்ச் மாதிரி ரெடி பண்ணி வைச்சுருக்காங்க" என விமர்சித்து வருவதையும் பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications